ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்
ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தவேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்து புதிய ஊதிய மாற்றத்தை அறிவித்திட வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமான ஆண், பெண் ஊழியர்கள், ஆசியர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், நில அளவை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம், கிராம உதவியாளர் சங்கம், சுகாதாரத்துறை அலுவலர் சங்கம், மகளிர் துணைக்குழு உள்பட பல்வேறு அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு இடைநிலைப்பள்ளி ஆசிரியர் சங்கம், அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம், உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கூடடணி சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் பணியை புறக்கணித்து தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அரசு அலுவலர்கள் சங்கங்களும் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு சுமார் 500–க்கும் மேற்பட்ட ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திரளான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கலைந்து போகுமாறு தெரிவித்தனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 500–க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலங்களில் அலுவலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.