கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்


கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்
x
தினத்தந்தி 14 Sept 2017 4:45 AM IST (Updated: 14 Sept 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

கோடியக்கரை அருகே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்கள், வலைகளை இலங்கை மீனவர்கள் பறித்து சென்றனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த குணசீலன், சுப்பிரமணியன், சங்கர் ஆகியோருடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். அதேபோல் பாரதிதாசன் என்பவருக்கு சொந்தமான படகில் 4 பேர் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கை மீனவர்கள் 6 பேர் ஒரு படகில் வந்தனர். அவர்கள், சுரேஷ்குமாரின் படகிற்கு சென்று அதிலிருந்த 4 பேரை அரிவாளை காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்த வலை, திசை காட்டும் கருவி மற்றும் கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் ஆகியவற்றை பறித்தனர். அதேபோல் பாரதிதாசனின் படகில் சென்றவர்களையும் மிரட்டி மீன்கள், வலைகளை பறித்தனர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். 2 படகுகளிலும் இருந்த மீன்கள், வலைகளை பறித்ததுடன் மீனவர்களை தாக்கி விரட்டியுள்ளனர்.

இது குறித்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்லும் நிலையில் இலங்கை மீனவர்களும் மீன்களை பறிப்பதுடன் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவது நாகை மீனவர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கே அச்சப்படுகின்றனர். தமிழக மீனவர்கள் தங்களது எல்லைக்குள் அச்சமின்றி மீன்பிடிக்க செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story