பாம்பன் பாலத்தில் தொடர் விபத்து: கார் மோதி தடுப்புச்சுவர் இடிந்தது


பாம்பன் பாலத்தில் தொடர் விபத்து: கார் மோதி தடுப்புச்சுவர் இடிந்தது
x
தினத்தந்தி 15 Sept 2017 4:30 AM IST (Updated: 15 Sept 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் பாலத்தில் தொடர்ந்து விபத்து நடந்துவருகிறது. நேற்று பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

ராமேசுவரம்,

பாம்பன் ரோடு பாலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வழுவழுப்பாகவும், வெயிலில் உருகும் தன்மையுடனும் இருந்தது. இதனால் பாலத்தில் செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.

இந்த நிலையில் மதுரையில் இருந்து நேற்றுமுன்தினம் ராமேசுவரம் நோக்கி வந்த அரசு பஸ் பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்நிலையில் நேற்று ராமேசுவரத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார் என்பவர் காரில் திருச்சி சென்றுவிட்டு மீண்டும் அதே காரில் ராமேசுவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாம்பன் பாலத்தில் சென்றபோது நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புசுவரில் மோதி நின்றது. உடனே சதீஷ்குமார் காரை அந்த பகுதியில் இருந்து எடுத்து அருகில் நிறுத்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். விபத்தில் பாலத்தின் தடுப்புசுவர், காரின் முன்பகுதி சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். இதேபோல பாலத்தின் மற்றொரு பகுதியில் வாகனம் மோதியதில் தடுப்புச்சுவர் சேதமடைந்து உள்ளது.

இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்விபத்து காரணமாக ரோடு பாலத்தில் தடுப்பு சுவர், மின்கம்பம் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பெரிய விபத்து ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே இவற்றை சீரமைக்கவேண்டும், சாலை சீரமைப்பு பணியை விரைவில்முடிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாம்பன் ரோடு பாலம், சாலையை நேற்று தேசிய நெடுஞ் சாலை துறையின் கோட்ட பொறியாளர் வைரப்பன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது பற்றி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாம்பன் ரோடு பாலத்தில் ரூ. 1 கோடி மதிப்பல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை வழுவழுப்புத் தன்மையுடன் உள்ளது. இதனால் ரோடு பாலத்தில் தார், சிறிய ஜல்லி கற்கள் கலந்து புதிதாக சாலை அமைக்க ரூ. 40 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு டெல்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது. நிதி ஒதுக்கப் பட்டவுடன் பாம்பன் ரோடு பாலத்தில் மீண்டும் புதிய சாலை அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story