தாவணகெரேயில் பயங்கரம் கள்ளக்காதலை கைவிட மறுத்த சென்னை கோவில் பூசாரி படுகொலை
தாவணகெரே அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த சென்னையை சேர்ந்த கோவில் பூசாரி கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.
சிக்கமகளூரு,
தாவணகெரே அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த சென்னையை சேர்ந்த கோவில் பூசாரி கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கொலையாளியின் வீட்டை மோப்ப நாய் காட்டி கொடுத்தது. இந்த கொலை தொடர்பாக கள்ளக்காதலியின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
கல்லால் தாக்கி கொலைதாவணகெரே அருகே நாகனூர் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கடந்த 12–ந் தேதி 45–வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கே.ஆர். போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பீமாசங்கர் தலைமையிலான, கே.ஆர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையானவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
மோப்ப நாய்அப்போது அவரை யாரோ மர்மநபர்கள் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு உடலை, விவசாய தோட்டத்தில் வீசிசென்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அப்போது மோப்ப நாய் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் மோப்பம் பிடித்து ஓடி தாவணகெரே டவுன் வினோபாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நின்று விட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் இருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
3 பேர் கைதுவிசாரணையில் அவர்கள் வினோபாநகரை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 21), மஞ்சுநாத்(22), ஆட்டோ டிரைவரான நூருல்லா(22) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் தான் விவசாய தோட்டத்தில் பிணமாக கிடந்தவரை கொலை செய்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அப்போது கைதான சதீஷ்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கொலையானவர் சென்னையை சேர்ந்த கோவில் பூசாரியான அசோக்(46) ஆவார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது தாய் சந்திரம்மா சென்னையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று இருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசோக்குக்கும், எனது தாய் சந்திரம்மாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர்.
கள்ளக்காதலை கைவிட மறுப்புஇந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அசோக் அடிக்கடி சென்னையில் இருந்து தாவணகெரேவுக்கு வந்து எனது தாய் சந்திரம்மாவை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து உள்ளார். இது எனக்கு தெரியவந்ததும் மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நான் அசோக்கை கொலை செய்ய முடிவு செய்தேன். இதுபற்றி எனது நண்பர்களான மஞ்சுநாத், நூருல்லா ஆகியோரிடமும் கூறினேன். அவர்களும் அசோக்கை கொலை செய்ய எனக்கு உதவுவதாக தெரிவித்தனர். அசோக்கை கொலை செய்ய சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்து இருந்தேன்.
இந்த நிலையில் அசோக் சென்னையில் இருந்து தாவணகெரேவுக்கு வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதேப்போல் நேற்று(கடந்த 12–ந் தேதி) காலை அசோக், சென்னையில் இருந்து தாவணகெரேவுக்கு வந்தார். அவரை நான் பஸ் நிலையத்திற்கு சென்று ஆட்டோவில் அழைத்து கொண்டு நாகனூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு அழைத்து சென்றேன். அங்கு சென்றதும் நான்(சதீஷ்குமார்), அசோக், மஞ்சுநாத், நூருல்லா ஆகிய 4 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தோம். அப்போது எனது தாயுடனான கள்ளக்காதலை கைவிடும்படி அசோக்கிடம் கூறினேன். ஆனால் அவர் கள்ளக்காதலை கைவிட மறுத்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் அசோக்கை, நானும் எனது நண்பர்களான மஞ்சுநாத், நூருல்லா ஆகிய 3 பேரும் சேர்ந்து கல்லால் தாக்கி கொலை செய்தோம். பின்னர் உடலை அங்கேயே போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து விட்டோம். ஆனால் மோப்ப நாய் மோப்பம் பிடித்து எங்களை காட்டி கொடுத்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து கே.ஆர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 3 பேரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.