மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம்


மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 23 Sep 2017 10:30 PM GMT (Updated: 23 Sep 2017 7:08 PM GMT)

தேனி மாவட்டத்தில் விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

சின்னமனூர்,

தேனி, போடி, உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் போன்ற பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து எப்போதும் இருக்கும். மேலும் வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து விவசாய கூலித்தொழிலாளர்களை சரக்கு வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் மூலம் விவசாய தோட்டங்களுக்கு சென்று வருகின்றனர். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் விதிகளை மீறி சரக்கு வாகன உரிமையாளர்களும் தொழிலாளர்களை ஏற்றிச்செல்கின்றனர்.

மேலும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மார்க்கெட், பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகங்களுக்கு செல்ல பெரும்பாலும் ஷேர் ஆட்டோக்களையே பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக ஷேர் ஆட்டோக்களிலும் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச்செல்லப்படுகின்றனர்.

இவ்வாறு விதிமுறைகளை மீறி சரக்கு வாகனங்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் ஆட்களை ஏற்றிச்செல்வதால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. இதில் பலர் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது மாவட்ட போலீஸ் நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

தேனி மாவட்ட பகுதிகளில் போலீசார் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வாகன சோதனை நடத்துகின்றனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி சோதனை நடத்தி அபராதம் விதிக்கின்றனர்.

ஆனால் விதிமுறைகளை மீறி சரக்கு வாகனம், ஷேர் ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றிச்செல்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே சரக்கு வாகனம் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் விதிமுறையை மீறி ஆட்களை ஏற்றிச்செல்பவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story