மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் கோவை நகைக்கடை ஊழியரிடம் 350 பவுன் நகைகள் கொள்ளை


மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் கோவை நகைக்கடை ஊழியரிடம் 350 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 23 Sep 2017 10:00 PM GMT (Updated: 23 Sep 2017 7:50 PM GMT)

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் கோவை நகைக்கடை ஊழியரிடம் 350 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

மதுரை,

கோவையைச் சேர்ந்தவர்கள் தெட்சிணாமூர்த்தி, ஜனார்த்தனன். இவர்கள் இருவரும் கோவையில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வருகின்றனர். பல்வேறு ஊர்களுக்குச் சென்று நகை ஆர்டர் எடுத்து, அந்த நகைகளை தயார் செய்து கொண்டு போய் கொடுப்பது தான் அவர்களின் வேலை. சம்பவத்தன்று இவர்கள் இருவரும் நகைகளுடன் மதுரைக்கு வந்து ஆர்டர் எடுத்த நகைகளை கொடுத்தனர்.

பின்னர் நேற்று அதிகாலை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் சென்று தெட்சிணாமூர்த்தி ராமநாதபுரத்திற்கும், ஜனார்த்தனன் வேறு ஊருக்கும் பஸ் ஏறினார்கள். பின்னர் பஸ்சில் நகைப் பையை வைத்து விட்டு தெட்சிணாமூர்த்தி கீழே இறங்கி டீ குடிக்க சென்றார். டீ குடித்து முடித்து மீண்டும் பஸ்சில் ஏறி சென்று பார்த்த போது அவர் வைத்திருந்த நகைப் பையை காணவில்லை.

உடனே பதறி போய் அவர் பஸ் நிலையம் முழுவதும் தேடி பார்த்தார். பை கிடைக்கவில்லை. உடனே அங்கிருந்த அண்ணா நகர் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது காணாமல் போன பையில் சுமார் 350 பவுன் நகைகள் இருந்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

உடனே மதுரை நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அந்த நேரத்தில் அவனியாபுரம் ரிங் ரோட்டில் மர்மப் பை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில் அது தெட்சிணாமூர்த்தி கொண்டு வந்த நீல நிற பை என்பதும், கொள்ளையர்கள் நகைகளை எடுத்துக்கொண்டு பையைவீசி எறிந்ததும் தெரியவந்தது, பையில் தெட்சிணாமூர்த்தியின் பழைய சட்டை, செல்போன் மட்டுமே இருந்தது.

இக்கொள்ளை சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் தெட்சிணாமூர்த்தியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story