காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி முதல்–மந்திரி பேச்சு


காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி முதல்–மந்திரி  பேச்சு
x
தினத்தந்தி 23 Sep 2017 11:30 PM GMT (Updated: 2017-09-24T03:53:06+05:30)

4½ ஆண்டுகளில் எந்த ஊழல் புகாரும் இல்லை என்றும், அதனால் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என்றும் முதல்–மந்திரி சித்தராமையா பேசியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2018) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகத்தில் கடந்த 4½ ஆண்டு கால அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்ல வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இந்த பிரசார நிகழ்ச்சியை பெங்களூரு மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் நேற்று முதல்–மந்திரி சித்தராமையா குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

இதில், கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மாநில தலைவர் பரமேஸ்வர், மந்திரிகள் ராமலிங்க ரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மகாதேவபுராவில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று அங்குள்ள பெண்களிடம் அரசின் சாதனைகள் குறித்து முதல்–மந்திரி சித்தராமையா பேசியதுடன், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். முன்னதாக நடந்த பிரசார நிகழ்ச்சியில் முதல்–மந்திரி சித்தராமையா பேசியதாவது:–

கர்நாடகத்தில் எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 4½ ஆண்டுகள் ஆகிறது. இந்த 4½ ஆண்டுகளில் அரசின் சாதனைகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது மக்களை நேரடியாக சந்தித்து பேச கிடைத்த வாய்ப்பாகும். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 165 வாக்குறுதிகளை கொடுத்தது. அவற்றில் 155 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுவே அரசின் மிகப்பெரிய சாதனையாகும்.

இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த எந்த ஒரு அரசும், இதுபோன்று கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை. இந்த பிரசாரத்தின் போது தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம், விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்தது, ஏழை மக்களுக்காக அரசு கொண்டு வந்த திட்டங்கள், அன்னபாக்ய திட்டம் உள்ளிட்டவற்றை மக்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவிப்பார்கள்.

மாநில அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்தது. ஆனால் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், ரூ.8 ஆயிரம் கோடி அளவிலான கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளுக்கு மாநில அரசு ‘லாலிபாப்‘ கொடுத்திருப்பதாக கூறினார். தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுத்து விட்டது.

விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தும்படி பா.ஜனதா தலைவர்களிடம் கூறினேன். பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசவே பா.ஜனதா தலைவர்கள் பயப்படுகிறார்கள். அப்படி இருக்கும் போது விவசாயிகள் பற்றி பேச பா.ஜனதாவினருக்கு தகுதி இல்லை.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3½ ஆண்டுகளில் விமானத்தில் மட்டுமே பறந்து வருகிறார். இந்தியாவில் அவர் இருப்பதே கிடையாது. வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர வேறு எந்த சாதனையும் பிரதமர் செய்ததில்லை. எடியூரப்பா சிறைக்கு சென்று வந்துள்ளார். அவர் மீது பல வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருகிறது. அவரை காப்பாற்றவே வழியில்லாத நிலை இருக்கிறது. ஆனால் எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயார் செய்து வருவதாக எடியூரப்பா கூறுவதை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது.

எனது தலைமையிலான 4½ ஆண்டு கால ஆட்சியில் எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை. மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த ஊழல் புகார்களும் இல்லை. காங்கிரஸ் அரசு மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. அதனால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரும் நெஞ்சை நிமிர்த்தி பேசலாம். மக்கள் ஆசிர்வாதத்தால் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அதுபோல, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் காங்கிரசை மக்கள் ஆதரிக்க தயாராகி விட்டார்கள். கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி.

பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு ஒரு போதும் பலிக்காது. அடுத்த ஆண்டு (2018) ஏப்ரல் மாதம் இறுதியில் தேர்தல் வரலாம். முன்கூட்டியே சட்டசபைக்கு தேர்தல் வராது. அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று, காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அனைத்து தொண்டர்களும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா பேசினார்.


Next Story