கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் விதையில்லா கருப்பு திராட்சை


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் விதையில்லா கருப்பு திராட்சை
x
தினத்தந்தி 24 Sep 2017 10:30 PM GMT (Updated: 2017-09-24T23:12:40+05:30)

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு விதையில்லா கருப்பு திராட்சை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உத்தமபாளையம்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னை விவசாயத்துக்கு அடுத்த படியாக அதிக அளவில் கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, அனுமந்தன்பட்டி, ராயப்பன்பட்டி, சின்னஓவுலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் திராட்சை சாகுபடி நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலேயே ஆண்டுதோறும் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் நடைபெறும் இடமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விளங்குகிறது. இங்கு விளையும் கருப்பு பன்னீர் திராட்சை அண்டை மாநிலமான கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்றுமதி தரம் வாய்ந்த திராட்சை விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்ட இங்குள்ள திராட்சை ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு புதிய ஏற்றுமதி தரம் வாய்ந்த ரகங்களை கண்டறிந்து விவசாயம் செய்ய வேர்குச்சிகள் வழங்கப்பட்டது. திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு தற்போது வரை சுமார் 3½ லட்சம் வேர்குச்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

அணைப்பட்டி, க.புதுப்பட்டி, சுருளிப்பட்டி, தென்பழனி உள்ளிட்ட பகுதியில் கிருஷ்ணா விதையில்லா கருப்பு திராட்சை என்ற ரகத்தை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே விளையக்கூடிய இந்த ரக திராட்சையில் ஏக்கர் ஒன்றுக்கு 10 டன் வரை விளைச்சல் தருகிறது. விதையில்லா கருப்பு திராட்சை கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தியாவிலேயே அதிகம் திராட்சை விளையக்கூடிய மராட்டிய மாநிலத்தில் திராட்சை விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை.

இதனால் அடுத்து மேற்குவங்காளத்தில் இருந்து திராட்சை வியாபாரிகள் இங்கு வந்து விதையில்லா கருப்பு திராட்சை பழங்களை கொள்முதல் செய்கின்றனர். இங்கு கொள்முதல் செய்யப்படும் விதையில்லா கருப்பு திராட்சைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதுகுறித்து ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பார்த்தீபன், சுப்பையா ஆகியோரிடம் கேட்ட போது, திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் பயன் பெறும் வகையில் 120 ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் வேர்குச்சிகள் ஒட்டு கட்டப்பட்டுள்ளது. இதில் கிருஷ்ணா விதையில்லா கருப்பு திராட்சையை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். தற்போது நன்கு விளைந்து விதையில்லா கருப்பு திராட்சை பழங்களை அறுவடை செய்து வருகின்றனர். இதனை கொள்முதல் செய்ய வெளிமாநில வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திராட்சை விவசாயிகளுக்கு தேவையான அளவு விதையில்லா கருப்பு திராட்சை வேர்குச்சிகள் உள்ளது. அவற்றை விவசாயிகள் ஆராய்ச்சி நிலையத்துக்கு வந்து பெற்று கொள்ளலாம் என்றனர்.


Next Story