காங்கிரஸ் திருடர்களின் கட்சி என கருத்து: ராஜண்ணா எம்.எல்.ஏ. கூறியது உண்மை தான்


காங்கிரஸ் திருடர்களின் கட்சி என கருத்து: ராஜண்ணா எம்.எல்.ஏ. கூறியது உண்மை தான்
x
தினத்தந்தி 24 Sep 2017 10:40 PM GMT (Updated: 24 Sep 2017 10:39 PM GMT)

காங்கிரஸ் திருடர்களின் கட்சி என்று ராஜண்ணா எம்.எல்.ஏ. கூறிய கருத்து உண்மை தான் என்று ஈசுவரப்பா கூறினார்.

சிவமொக்கா,

மேல்சபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஈசுவரப்பா நேற்று சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:–

காங்கிரஸ் திருடர்களின் கட்சி என்று அந்த கட்சியை சேர்ந்த ராஜண்ணா எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்து உண்மை தான். காங்கிரஸ் திருடர்களின் கட்சி தான். இதேபோல, பல்கலைக்கழக துணைவேந்தர் மல்லிகா கண்டி என்பவர், விதான சவுதாவில் வேலை ஆக வேண்டும் என்றால் சூட்கேசுடன் தான் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதுவும் உண்மை தான். காங்கிரஸ் கட்சியினர், ஊழல் செய்வதை தான் தொழிலாக வைத்துள்ளனர்.

சந்தோசுக்கும், எடியூரப்பாவுக்கும் இடையே எந்த பிளவும் இல்லை. இருவரும் இணைந்தே பிரசார பணிகளை மேற்கொள்கின்றனர். சந்தோஷ் தேர்தல் குழுவின் தலைவராகவும், எடியூரப்பா பிரசார குழுவின் தலைவராகவும் உள்ளனர். இருவரும் கட்சியை பலப்படுத்தி, பா.ஜனதாவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

அடுத்து ஆண்டு (2018) நடக்கும் சட்டசபை தேர்தலில் நான் சிவமொக்கா நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட உள்ளேன். சிகாரிபுரா தொகுதியில் நான் போட்டியிட போவதாக கூறுவதில் உண்மை இல்லை. இனிமேல் எனது உதவியாளராக வினய் செயல்பட மாட்டார். அவருக்கு பதில், பசவராஜ் எஸ்.குரி என்பவரை எனது உதவியாளராக நியமித்து உள்ளேன். வினய் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. அவர் கடத்தப்பட்டது பற்றி ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது. இதனால், வினய் எனது உதவியாளராக செயல்படுவதை நிறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story