காரைக்குடி ரெயில் நிலையத்தில் மத்திய பயணிகள் வசதி மேம்பாட்டுக்குழுவினர் ஆய்வு


காரைக்குடி ரெயில் நிலையத்தில் மத்திய பயணிகள் வசதி மேம்பாட்டுக்குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Sep 2017 10:45 PM GMT (Updated: 30 Sep 2017 7:02 PM GMT)

காரைக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள கட்டமைப்பு வசதிகள் குறித்து மத்திய பயணிகள் வசதி மேம்பாட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

காரைக்குடி,

காரைக்குடி ரெயில் நிலையத்தில் கட்டமைப்பு வசதிகள், பயணிகளுக்கான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய பயணிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தந்தனர். பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது அகில இந்திய பயணிகள் மேம்பாட்டுக்குழு தலைவர் எச்.ராஜா கூறியதாவது:–

ரெயில் பயணிகள் மேம்பாட்டு குழு காரைக்குடி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் குறித்தும், ஏற்கனவே உள்ள வசதிகள் சரிவர உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தது. ஏ, பி, சி என்று வருவாய்க்கு தகுந்தவாறு ரெயில் நிலையங்கள் வகைப்படுத்தப்படும். இதில் காரைக்குடி ரெயில் நிலையம் பி வகையை சேர்ந்தது. இங்கு ஒரு நடை மேம்பாலம் மட்டும் உள்ளது. இதுவும் அதிக தூரத்தில் உள்ளதாக புகார் எழுந்தது. தற்போது ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகில் புதிதாக நடை மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி விரைவுப்படுத்தப்படும்.

மேலும் உணவகம் திறப்பதற்கும், வாகன நிறுத்தமிடத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்குடி ரெயில் நிலையத்தில் சுகாதாரம் நல்ல நிலையம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. காரைக்குடி ரெயில் நிலையத்தில் அனைத்து வசதிகளும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அயோத்தி–ராமேசுவரம் விரைவு ரெயில் காரைக்குடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக புதுடெல்லியில் இருந்து காரைக்குடி ரெயில் நிலையத்திற்கு வந்த மத்திய பயணிகள் மேம்பாட்டுக்குழுவினரை காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி.திராவிடமணி, பொருளாளர் அழகப்பன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.


Next Story