நெல்லை நாற்கர சாலையில் விபத்து: கார் கவிழ்ந்து சட்டக்கல்லூரி பேராசிரியை பலி


நெல்லை நாற்கர சாலையில் விபத்து: கார் கவிழ்ந்து சட்டக்கல்லூரி பேராசிரியை பலி
x
தினத்தந்தி 3 Oct 2017 4:43 AM IST (Updated: 3 Oct 2017 4:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை நாற்கர சாலையில் கார் கவிழ்ந்து சட்டக்கல்லூரி பேராசிரியை பலியானார். அவருடைய கணவர் மற்றும் மகன் படுகாயம் அடைந்தார்.

நெல்லை,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வஞ்சூர் அந்தோணி இல்லம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்ஜித் (வயது 40). இவர் திருவனந்தபுரம் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சைமோள் (36). இவர் புதுச்சேரியில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சைமோள் திருவனந்தபுரத்துக்கு வந்து இருந்தார். விடுமுறைக்கு பிறகு சைமோள் மீண்டும் புதுச்சேரிக்கு நேற்று காரில் புறப்பட்டார். காரை பிரேம்ஜித் ஓட்டினார். சைமோள் தனது மடியில் ஒரு வயது குழந்தை அபிஷேக்கை வைத்திருந்தார்.

நெல்லை– பாளையங்கோட்டை நாற்கர சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் நேற்று அதிகாலை கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழுந்து சாலையோர தடுப்பில் மோதியது. இதில் கார் ரோட்டில் கவிழ்ந்து சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.

இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சைமோள், குழந்தை மற்றும் பிரேம்ஜித் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சைமோள் பரிதாபமாக இறந்தார். பிரேம்ஜித் மற்றும் குழந்தை அபிஷேக் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குழந்தை அபிஷேக் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story