நாகர்கோவிலில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்


நாகர்கோவிலில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2017 4:30 AM IST (Updated: 4 Oct 2017 11:04 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் வரவேற்பு விழாவுக்கு அனுமதி வழங்கக்கோரி அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ‘திடீர்‘ போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோணத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களை, இரண்டாம் ஆண்டு மாணவ–மாணவிகள் வரவேற்கும் விதமாக ஆண்டுதோறும் வரவேற்பு விழா நடத்தி வருவதாகவும், இதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவ–மாணவிகள் வகுப்புகளில் சேர்ந்து பல நாட்கள் ஆன பின்னரும் இரண்டாம் ஆண்டு மாணவ–மாணவிகள் வரவேற்பு விழா நடத்த கல்லூரி நிர்வாகமும், துறைத்தலைவர்களும் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பலமுறை மாணவர்கள் தரப்பில் விழா நடத்த அனுமதி கோரியும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதை கண்டித்தும், விழா நடத்த அனுமதி வழங்கக்கோரியும் நேற்று மதியம் இரண்டாம் ஆண்டு மாணவ– மாணவிகள் ஏராளமானோர் திடீரென வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வரவேற்பு விழா நடத்த அனுமதி வழங்கக்கோரி கோ‌ஷங்களையும் எழுப்பினர்.

இந்த போராட்டத்தால் அங்கு திடீர் பரபரப்பு உருவாகியது. இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினரும், போலீசாரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


Next Story