திருப்பூரில் மூதாட்டியிடம் சங்கிலியை பறித்த வாலிபர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்


திருப்பூரில் மூதாட்டியிடம் சங்கிலியை பறித்த வாலிபர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Oct 2017 3:30 AM IST (Updated: 5 Oct 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மூதாட்டியிடம் சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் குப்புசாமிபுரத்தை சேர்ந்தவர் சின்னபொண்ணு(வயது 69). இவர் காலேஜ் ரோட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த மாதம் 19–ந் தேதி சின்னபொண்ணு, தனது வீட்டுக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி, கண் இமைக்கும் நேரத்தில் சின்னபொண்ணு அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்தான்.

உடனே சுதாரித்துக்கொண்ட சின்னபொண்ணு தங்க சங்கிலியை பிடித்துக்கொண்டார். இருப்பினும் தங்க சங்கிலி இரண்டாக அறுந்து 2 பவுன் எடையுள்ள சங்கிலி அந்த ஆசாமியின் கைக்கும், மீதம் உள்ள 2 பவுன் சங்கிலி சின்னபொண்ணுவின் கைக்கும் சிக்கியது.

பின்னர் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பினான். இதுகுறித்து சின்னபொண்ணு அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள கட்டிடத்தில் பொருத்திய இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை கைப்பற்றி போலீசார் துப்பு துலக்கினார்கள்.

இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் சந்திராபுரம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கு இடமாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் சின்னபொண்ணுவிடம் சங்கிலியை பறித்துச்சென்றவர் என்பது கண்டறியப்பட்டது.

மேலும் விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் கல்மேடு களஞ்சியம்நகரை சேர்ந்த இளங்கோ(22) என்பதும், இவர் கே.வி.ஆர்.நகரில் உள்ள தனது நண்பருடன் தங்கியிருந்து அவருடைய மோட்டார் சைக்கிளை வாங்கி வந்து சின்னபொண்ணுவிடம் சங்கிலியை பறித்துச்சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இளங்கோவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2 பவுன் சங்கிலி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story