கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி பாகூர் போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகை
கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி பாகூர் போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகூர்,
பாகூர் அருகே சேலியமேடு அரசு பள்ளியில் உள்ள அம்பேத்கர் உருவ படம் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து சேலியமேடு பேட் பகுதியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அரங்கனூரில் உள்ள பா.ம.க. கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டது. இதை தட்டிக்கேட்ட பா.ம.க. நிர்வாகி தாக்கப்பட்டார்.
இதையடுத்து இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இதை தடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதன்பின்னர் இரு பிரிவினரும் அடுத்தடுத்து நடத்திய சாலைமறியலை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் சேலியமேடு, அரங்கனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றத்தை தணிக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த மோதல் தொடர்பாக இரு பிரிவை சேர்ந்த மொத்தம் 226 பேர் மீது பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை பா.ம.க. முன்னாள் எம்.பி. தன்ராஜ் தலைமையில் அக்கட்சியினர் பாகூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.க. கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மற்றும் மோதலில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யவேண்டும் என்று கூறி அவர்கள் கோஷமிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரகீம் மற்றும் போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மோதலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போராட்டத்தில் பா.ம.க. துணை அமைப்பாளர் கணபதி, மாநில பொருளாளர் முகமது யூனுஸ், தொழிற்சங்க தலைவர் ஜெயபால், மண்டல செயலாளர் சிவா, வன்னியர் சங்க செயலாளர் சீனிவாசன், இளைஞர் சங்க செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.