செங்குன்றம் அருகே மின்னல் தாக்கியது: சார்ஜரில் போட்டபடி செல்போன் பயன்படுத்திய என்ஜினீயரிங் மாணவர் சாவு
செங்குன்றம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சார்ஜரில் போட்டபடி செல்போன் பயன்படுத்தியபோது மின்னல் தாக்கியதால் பரிதாபமாக இறந்தார்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் நாகாத்தம்மன் நகரை சேர்ந்தவர் சித்திரைவேல். இவரது மகன் ரஞ்சித் (வயது 21), திருப்பாச்சூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. இறுதி ஆண்டு படித்துவந்தார்.
அப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. அப்போது தூக்கத்தில் இருந்து எழுந்த ரஞ்சித் தனது செல்போனை சார்ஜரில் போட்டபடி வாட்ஸ்–அப்பில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட கதிர்வீச்சு ரஞ்சித் மீது பாய்ந்தது. இதில் அலறியபடி அவர் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு வந்த அவரது பெற்றோர் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை உடனடியாக செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரஞ்சித் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரஞ்சித் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி விசாரணை நடத்தி வருகிறார்.