ஓடும் ரெயிலில் தம்பதியை தாக்கி பணம், செல்போன் பறித்த 2 வாலிபர்களுக்கு சிறை


ஓடும் ரெயிலில் தம்பதியை தாக்கி பணம், செல்போன் பறித்த 2 வாலிபர்களுக்கு சிறை
x
தினத்தந்தி 8 Oct 2017 3:00 AM IST (Updated: 8 Oct 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் தம்பதியை தாக்கி பணம், செல்போன் பறித்த 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஏற்றமானூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோட்டயம்,

திருவனந்தபுரம் கல்லம்பளம் பகுதியை சேர்ந்தவர் முகமதுநாசிர் (வயது 54). அவருடைய மனைவி பயருன்னிசா (35). இவர்கள் மகன் முகமது நாசிம் (6). இந்தநிலையில் கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்டு 8–ந் தேதி முகமது நாசிர் தனது மனைவி, மகனுடன் தலையோரபரம்பு திருவனந்தபுரம்–புதுடெல்லி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

இதற்கிடையில், கோட்டயம் ரெயில் நிலையத்தில் சிக்னலுக்காக ரெயில் நின்று கொண்டிருந்தது. அந்த வேளையில், ரெயிலில் வாலிபர்கள் 2 பேர் ஏறினர். பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது. இதைத்தொடர்ந்து அந்த வாலிபர்கள், நாசரிடம் நைசாக பேச்சுக் கொடுத்தனர். பின்னர் அந்த வாலிபர்கள், முகமதுநாசிரையும், அவருடைய மனைவியையும் தாக்கி அவர்கள் வைத்திருந்த பணப்பை, செல்போன் ஆகியவற்றை பறித்தனர்.

பின்னர் அபாய சங்கிலியை இழுத்து பிடித்து ரெயிலை நிறுத்தி தப்பியோடினர். இதுகுறித்து தம்பதியினர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் ஏற்றமனூர் ரெயில்வே போலீசும், கருந்துருத்தி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தம்பதியை தாக்கி பணம், செல்போனை பறித்தது தமிழ்நாடு நாகர்கோவிலை சேர்ந்த சந்தோஷ் (21), வினு (19) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஏற்றமானூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த கோர்ட்டு, குற்றவாளியான சந்தோஷ், வினு ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.11 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story