சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு அனுமதி வழங்க, வீரபாண்டியில் தற்காலிக சோதனை சாவடி பாரதீய ஜனதா வலியுறுத்தல்


சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு அனுமதி வழங்க, வீரபாண்டியில் தற்காலிக சோதனை சாவடி பாரதீய ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Oct 2017 3:15 AM IST (Updated: 9 Oct 2017 11:29 PM IST)
t-max-icont-min-icon

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வீரபாண்டியில் தற்காலிக சோதனை சாவடி அமைக்க வேண்டும்‘ என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். இந்த கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 200–க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்தனர்.

கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரைகள் வழங்கினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேனி தாலுகா செயலாளர் பெத்தலீஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘தேனி அல்லிநகரம் நகராட்சி 12–வது வார்டுக்கு உட்பட்ட காந்திநகர் 5–வது தெருவில் மின்கம்பம் பழுதடைந்து, விழும் நிலையில் உள்ளது. பலவிதமான போராட்டங்களுக்கு பிறகு நகராட்சி ஆணையாளர், பொறியாளருக்கு உத்தரவிட்டார். அதன்பிறகும் பிரச்சினை தீரவில்லை. மின்கம்பம் எந்த நேரத்திலும் விழும் நிலை உள்ளது. எனவே, இதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜெய்முருகேஷ், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘தேனி நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. உழவர்சந்தை திட்டச்சாலையை திறந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த சாலைக்கு தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி வழங்கி விட்டது. இந்த சாலையை அமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நகரில் நெரிசல் குறையும். எனவே, மக்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளர் ஜாபர்சேட் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘பெரியகுளம் ஒன்றியம் கீழவடகரை ஊராட்சி 6–வது வார்டு பகுதியில் குடிநீர் குழாயில், சாக்கடை கலந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி மாவட்ட தலைவர் மலைச்சாமி தலைமையில் நிர்வாகிகள் சிலர் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கார்த்திகை, மார்கழி மாதங்களில் தேனி வழியாக ஏராளமான பக்தர்கள் சென்று வருவார்கள். கேரளாவுக்கு செல்லும் வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி வழங்குவதற்கான வட்டார போக்குவரத்து சோதனை சாவடி பழனிசெட்டிபட்டியில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் செயல்படுகிறது. வாகன தணிக்கைக்கு இங்கு வாகனங்கள் நின்று செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இங்கு இல்லை. மேலும், வீரபாண்டி கவுமாரியம்மன், கண்ணீஸ்வரமுடையார் கோவிலுக்கு பக்தர்கள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்கின்றனர். எனவே, வீரபாண்டியில் தற்காலிகமாக 2 மாத காலத்துக்கு வட்டார போக்குவரத்து சோதனை சாவடி அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கும். கோவில்களையும் தரிசனம் செய்து செல்வார்கள்’ என்று கூறப்பட்டு உள்ளது.

இதேபோல் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவ–மாணவிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், தமிழக அரசை கண்டித்து அங்கு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகள் தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டதற்கான அரசாணையை ரத்து செய்து, பழைய நிலையில் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.


Next Story