ராமாபுரத்தில் மாணவர்கள் விடுதிகளுக்குள் புகுந்து மடிக்கணினி திருட்டு 2 வாலிபர்கள் கைது


ராமாபுரத்தில் மாணவர்கள் விடுதிகளுக்குள் புகுந்து மடிக்கணினி திருட்டு 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 10 Oct 2017 4:15 AM IST (Updated: 10 Oct 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

ராமாபுரத்தில் மாணவர்கள் விடுதிகளுக்குள் புகுந்து மடிக்கணி திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,

வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள விடுதிகள் மற்றும் வீடுகளில் அடிக்கடி மடிக்கணினிகள் திருட்டு போய் விடுவதாக ராயலாநகர் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனையடுத்து ராயலா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவங்கள் நடந்த இடங்களில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமாபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். அவர்களிடம் சில மடிக்கணினிகள் இருப்பது தெரியவந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் தண்டையார்பேட்டையை சேர்ந்த பாலாஜி(வயது 28), ஆவடியை சேர்ந்த ஜவஹருல்லா(26) என்பது தெரியவந்தது.

மேலும், இருவரும் கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள விடுதிகளுக்கு டேட்டா கார்டுகள் விற்பனை செய்வது போல் சென்று நோட்டமிடுவார்கள். பின்பு அதிகாலை வேளையில் விடுதியின் கதவுகள் திறந்து இருக்கும் நேரத்தில் உள்ளே புகுந்து நைசாக மடிக்கணினிகளை திருடிச் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதும் தெரியவந்தது.

2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 மடிக்கணினிகள் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரின் மீது பல்வேறு பகுதிகளில் மடிக்கணினி திருடிய வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story