ஆவடியில் பெண் கொலை: நகைக்காக கணவரே மனைவியை கொன்ற கொடூரம்
ஆவடியில் நடந்த பெண் கொலையில் துப்பு துலங்கியது நகைக்காக கணவரே மனைவியை கொன்ற கொடூரம் போலீசை திசைதிருப்ப ‘நடத்தையில் சந்தேகம்’ என நாடகமாடியதாக வாக்குமூலம்.
ஆவடி,
ஆவடியில் நடந்த பெண் கொலையில் 10 நாட்களுக்கு பின்னர் துப்பு துலங்கியது. நகைக்காக மனைவியை கணவரே கொன்றதும் போலீசை திசைதிருப்ப மனைவியின் நடத்தையில் சந்தேகம் என கூறியதும் விசாரணையில் தெரியவந்தது. கொலையுண்ட பெண்ணின் கணவர் இதனை போலீசில் வாக்குமூலமாக அளித்து உள்ளார்.
ஆவடியை அடுத்த கொல்லுமேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் நிஷாராஜன் (வயது33). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி மோகனபிரியா(28) இவர்களுக்கு அஞ்சனா (7) என்ற மகளும், தஷ்வந்த் (5) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 3–ந் தேதி வீட்டில் தனியாக இருந்த மோகனபிரியா கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் நகை மாயமாகி இருந்தது.
இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட மோகனபிரியாவின் கணவர் நிஷாராஜன் உள்பட பலரிடம் விசாரித்தனர். அப்போது நிஷாராஜன் தனது மனைவியின் நடத்தை சரியில்லை எனவே யாராவது கொலை செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதனால் போலீசார் நிஷாராஜன் உள்ளிட்ட அனைவரையும் விசாரிக்காமல் அனுப்பி விட்டு மேலும் விசாரணையை தொடர்ந்தனர்.
இந்நிலையில் பலரிடம் பல கோணத்தில் போலீசார் விசாரித்ததில் நிஷாராஜன் தான் மனைவி மோகனபிரியாவை குடி போதையில் நகைக்காக கொலை செய்துவிட்டு போலீசை திசை திருப்ப மனைவி நடத்தை சரியில்லை எனவே வேறு யாராவது கொலை செய்திருக்கலாம் என்று நாடகமாடியது தெரிந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, நிஷாராஜனை நேற்று கைது செய்து மீண்டும் அவரிடம் விசாரித்தார்.
அப்போது ‘நான் தான் மனைவியை நகைக்காக கொலை செய்தேன் என்றும் போலீசை திசை திருப்பவே மனைவி நடத்தை சரியில்லை’ என்று பொய் சொன்னதாகவும் போலீசாரிடம் வாக்குமூலமாக கூறியுள்ளார்.
பின்னர் அவரை போலீசார் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
நகைக்காக கணவரே மனைவியை கொடூரமாக கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.