பாளையங்கோட்டையில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி; 50 பேர் கைது
பாளையங்கோட்டையில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்த 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவில் பகுதி பொது மக்கள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்து இருந்தனர். 23–வது வார்டு பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும். நெல்லை மாநகராட்சியில் பழைய வீடுகளை அளவீடு செய்யாமல், சதவீத அடிப்படையில் வரி விதிக்க வேண்டும். புதிய வீடுகளுக்கு மட்டுமே சதுர அடியில் வரி விதிக்க வேண்டும். பழைய தேதியிட்டு வரி விதிப்பை அமல்படுத்த கூடாது. உள்ளாட்சி தேர்தல் நடத்தும் வரை புதிய வரி விதிக்க கூடாது. அரசாணை இல்லாமல் வரி விதிக்கும் திட்டத்தை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி அந்த பகுதி மக்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் கூடினர். அங்கு சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வந்து பொது மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
பின்னர் முன்னாள் கவுன்சிலர் உமாபதி சிவன் தலைமையில் அங்கிருந்து பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு ஊர்வலமாக புறப்பட்டனர். ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் அங்கு சென்று ஊர்வலமாக செல்லவும், முற்றுகையிடவும் அனுமதி மறுத்து விட்டனர். இதை எதிர்த்து செல்ல முயன்ற 12 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். பிற்பகலில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.