தேஜஸ் ரெயிலில் உணவு சாப்பிட்ட 40 பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதி
தேஜஸ் ரெயிலில் உணவு சாப்பிட்ட 40 பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
மும்பை,
மும்பை சி.எஸ்.எம்.டி.– கோவா மாநிலம் கர்மாலி இடையே தேஜஸ் சொகுசு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை கர்மாலியில் இருந்து தேஜஸ் ரெயில் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் பயணிகளுக்கு காலை ரெயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக(ஐ.ஆர்.சி.டி.சி) காண்டிராக்டர் மூலம் பேண்டரி காரில் சமைக்கப்பட்ட சைவம் மற்றும் அசைவ சிற்றுண்டி கொடுக்கப்பட்டது.
இதை சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் பயணிகள் 40 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் ரெயிலில் பரபரப்பு உண்டானது.
இதைத்தொடர்ந்து ரெயில் சிப்லுன் வந்ததும் பாதிக்கப்பட்ட பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இதில், 3 பயணிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘290 பயணிகளுக்கு காலை உணவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பயணிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சைவம் மற்றும் அசைவ உணவை வாங்கி சாப்பிட்டு உள்ளனர். எந்த உணவை சாப்பிட்டதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. உணவு மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட உள்ளது’’ என்றார்.