திசையன்விளையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 35 பவுன் நகைகள் திருட்டு கைவரிசை காட்டிய மர்ம நபர் யார்?


திசையன்விளையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 35 பவுன் நகைகள் திருட்டு கைவரிசை காட்டிய மர்ம நபர் யார்?
x
தினத்தந்தி 17 Oct 2017 2:15 AM IST (Updated: 16 Oct 2017 8:45 PM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 35 பவுன் நகைகள் திருட்டு போனது. கைவரிசை காட்டிய மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திசையன்விளை,

திசையன்விளையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 35 பவுன் நகைகள் திருட்டு போனது. கைவரிசை காட்டிய மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளம்பெண்

நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தை சேர்ந்தவர் சுவீட்டன். தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி எலிசபெத் கவிதா(வயது 35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எலிசபெத் கவிதா தன்னுடைய 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு திசையன்விளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் பஸ்சில் வந்தார்.

அப்போது தன்னுடைய தங்க நகைகள் 35 பவுனை ஒரு பையில் வைத்து தன்னுடன் எடுத்து வந்ததாக தெரிகிறது. உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் தெற்கு கள்ளிகுளத்துக்கு செல்வதற்காக திசையன்விளை பஸ் நிலையத்துக்கு எலிசபெத் கவிதா வந்தார்.

35 பவுன் நகைகள் மாயம்

அப்போது தான் வைத்திருந்த பையை பார்த்தார். அந்த பை திறந்த நிலையில் கிடந்தது. அதனுள் வைத்திருந்த 35 பவுன் தங்க நகைகளையும் காணவில்லை. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். நகைகள் மாயமானதை கண்டு அவர் கதறி அழுதார். திருட்டு போன நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது.

இது தொடர்பாக திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைவரிசை காட்டியது யார்?

விசாரணையில், எலிசபெத் கவிதா வெளியூருக்கு செல்ல முடிவெடுத்த போதே நகைகளை தன்னுடன் எடுத்துச் செல்ல முடிவு எடுத்ததாக தெரிகிறது. அதாவது வீட்டில் நகைகள் இருந்தால் யாராவது திருடிச் சென்று விடுவார்கள் என நினைத்து தன்னுடன் நகைகளை எடுத்து வந்துள்ளார். ஆனால் இவர், நகை வைத்திருந்ததை நோட்டமிட்ட மர்மநபர், ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைகளை திருடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நகைகளை திருடி கைவரிசை காட்டியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பஸ்சில் ஏற்கனவே நகை– பணம் திருடிய நபர்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

திசையன்விளையில் இளம்பெண் ஒருவரிடம் 35 பவுன் நகைகள் திருட்டு போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story