கழிவுநீர் தேங்கி இருந்த கட்டிட உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


கழிவுநீர் தேங்கி இருந்த கட்டிட உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 17 Oct 2017 4:00 AM IST (Updated: 17 Oct 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

ஆலந்தூர் மண்டலத்தில் கொசுக்களை உற்பத்தி செய்யும் விதமாக கழிவு நீர் தேங்கியிருந்த கட்டிட உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.

ஆலந்தூர்,

டெங்கு காய்ச்சலுக்கு காரணமாக உள்ள கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் கட்டிட கழிவுகள், கழிவுநீர் தேங்கி உள்ள பகுதிகள் இருந்தால் அந்த கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்து உள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னை நகரம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் மண்டல உதவி கமி‌ஷனர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் மண்டல நகர்நல அதிகாரி டாக்டர் மல்லிகா தலைமையில் சுகாதார அலுவலர்கள் வெங்கடேசன், சீனிவாசன், மாரிமுத்து மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது ஆலந்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் புதிய கட்டுமான கட்டிடத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் கட்டிடத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததும் அங்கு கழிவுகள் அதிக அளவில் இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதனால் அந்த கட்டிட உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் கட்டிடங்களில் கழிவுநீர் தேங்கியிருக்கும் வகையில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story