கவுரவ கொலை செய்ய தேடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் கலெக்டரிடம், பெண் மனு


கவுரவ கொலை செய்ய தேடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் கலெக்டரிடம், பெண் மனு
x
தினத்தந்தி 16 Oct 2017 10:45 PM GMT (Updated: 16 Oct 2017 10:17 PM GMT)

கவுரவ கொலை செய்ய தேடுபவர்களிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், காதல் திருமணம் செய்த பெண் மனு கொடுத்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி, மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் உள்பட அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது திருச்சியை அடுத்த சேதுராப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த பத்மாவதி (வயது21) என்ற பெண் தனது காதல் கணவருடன் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

நான் நர்சிங் டிப்ளமோ படித்து விட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறேன். சூறாவளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த டிப்ளமோ என்ஜினீயரான வேலுச்சாமி (24) என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தேன். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவர் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் அவருடன் பேசக்கூடாது என்று எனது பெற்றோர் தடை விதித்தனர். இந்நிலையில் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 11-ந்தேதி மதுரையில் ஒரு கோவிலில் வைத்து, மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டோம். இந்த தகவலை அறிந்ததும் எனது பெற்றோர் எங்களை கவுரவ கொலை செய்வதற்கு ஆட்கள் மூலம் தேடி வருகிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் எங்களை கொல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னத்துரை கொடுத்த கோரிக்கை மனுவில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறவிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கி உள்ள பயிர் கடன்களை மத்திய கால கடனாக மாற்றி இருப்பதால் எந்த பலனும் இல்லை. பயிர் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து விட்டு புதிய பயிர் கடன் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

லால்குடி அருகே உள்ள அப்பாத்துரையை அடுத்த தெற்கு சத்திரம் கிராமத்தை சேர்ந்த கலா (வயது38) என்ற பெண் தனது 2 மாத கைக்குழந்தையுடன் வந்து ஒரு மனு கொடுத்தார். அவருடன் அவருடைய மூத்த மகன் முருகன் (19) என்பவரும் வந்து இருந்தார். இவர் குள்ள உருவம் கொண்ட மாற்றுத்திறனாளியாவார். வேலை செய்ய முடியாத கணவர் மற்றும் மாற்றுத்திறனாளி மகன், மேலும் 2 மகள்களுடன் குடியிருக்க வீடு இன்றி சாலை ஓரத்தில் வசித்து வருவதாகவும், தனக்கு குடியிருக்க இலவச வீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டு, கலா மனு கொடுத்தார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவருக்கு உதவி செய்யும் வகையில் முதல் கட்டமாக ஆதார் அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுக்க வந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பொருட்கள் வாங்க சென்று விட்டதால் கலெக்டர் அலுவலகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. மொத்தமே 188 மனுக்கள் தான் வந்து இருந்தன.

சத்துணவு திட்டத்தில் அமைப்பாளராகப் பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்த தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் சின்னப்பள்ளி பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த பட்டம்மாள் என்பவரின் மகள் கல்பனாவுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளருக்கான பணி நியமன ஆணையினை கலெக்டர் ராஜாமணி நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினார்.


Related Tags :
Next Story