டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியலுக்கு முயன்ற பெண்கள்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியலுக்கு முயன்ற பெண்கள்
x
தினத்தந்தி 16 Oct 2017 10:45 PM GMT (Updated: 16 Oct 2017 10:17 PM GMT)

பொங்கலூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொங்கலூர்,

பொங்கலூர் அருகே வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது ஜெ.கிருஷ்ணாபுரம். இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனியாருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அப்போதே அங்கு கடை திறப்பதற்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் மனுவும் கொடுத்தனர். ஆனால் டாஸ் மாக் கடையை மூடுவதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த டாஸ்மாக் கடை தினமும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி, தங்கள் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை உடனே மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு திருப்பூர்-தாராபுரம் சாலையில் உள்ள வேலம்பட்டி பிரிவு பஸ்நிறுத்தத்துக்கு சாலை மறியல் செய்ய வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அவினாசி பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை தலைமையிலான போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு, சாலைமறியல் செய்ய தயாராக இருந்த பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும். நாங்கள் வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் மாவட்ட கலெக்டரிடம் சென்று முறையிட உள்ளோம். அதன் பின்னரும் கடையை மூட நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் டாஸ்மாக் கடை முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்றனர். இதைதொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story