‘கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்ததற்கான இன்னொரு ஆதாரம்’ எடியூரப்பா டுவிட்டரில் கருத்து


‘கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்ததற்கான இன்னொரு ஆதாரம்’ எடியூரப்பா டுவிட்டரில் கருத்து
x
தினத்தந்தி 16 Oct 2017 10:28 PM GMT (Updated: 16 Oct 2017 10:27 PM GMT)

பெங்களூருவில், பசுமாடுகள் வெட்டப்படுவதாக போலீசில் புகார் அளித்த பெண் என்ஜினீயர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடியூரப்பா,

பெங்களூரு,

இந்த சம்பவம் கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்ததற்கான இன்னொரு ஆதாரம் என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு கோரமங்களாவில் வசித்து வருபவர் நந்தினி(வயது 45). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர், தனது தோழி செஜில் என்பவருடன் கடந்த 14–ந் தேதி காரில் தலகட்டபுரா அருகே உள்ள அவலஹள்ளிக்கு சென்றார். அப்போது, அங்கு பசுமாடுகள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதை அவர்கள் பார்த்தாக தெரிகிறது. இதுகுறித்து அவர்கள் தலகட்டபுரா போலீசில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பசுமாடுகளை மீட்பதாகவும், மீட்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை தெரிவிப்பதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, நீண்டநேரம் ஆனபோதிலும் பசுமாடுகள் மீட்கப்பட்டதாக நந்தினிக்கு போலீஸ் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவர் தனது தோழியுடன் அவலஹள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு இருந்த 100–க்கும் அதிகமானவர்கள் அவர்களை நோக்கி கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதில் நந்தினியின் கார் கண்ணாடி உடைந்ததுடன், அவரும், அவருடைய தோழியும் காயமடைந்தனர். அத்துடன், அவர்கள் 2 பேரையும் அந்த கும்பல் ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து, நந்தினி கொடுத்த புகாரின் பேரில், தலகட்டபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், சம்பவம் குறித்து கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘பசுமாடுகள் வெட்டப்படுவது குறித்து புகார் அளித்த பெண் என்ஜினீயர் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது. பெங்களூருவில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம், முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதற்கான இன்னொரு ஆதாரம்‘ என கூறியுள்ளார்.


Next Story