கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபர் பிடிபட்டார்


கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 20 Oct 2017 4:15 AM IST (Updated: 20 Oct 2017 4:00 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

கன்னியாகுமரியில் இருந்து மும்பை வரும் எக்ஸ்பிரஸ் சம்பவத்தன்று புனே– கல்யாண் இடையே வந்து கொண்டிருந்தபோது, ஸ்லீப்பர் பெட்டியில் பயணம் செய்த தானேயை சேர்ந்த சேக் மஞ்சூர் (வயது32) என்பவரது செல்போன் மற்றும் இன்னொரு பயணியின் செல்போன் திடீரென காணாமல் போயின. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் இருவரும் ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புபடை போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

ரெயில் புனேயை அடுத்து கல்யாண் ரெயில் நிலையத்தில் தான் நிற்கும் என்பதால் செல்போனை திருடிய ஆசாமி ரெயிலுக்குள் இருப்பதை உறுதிப்படுத்தி கொண்ட பாதுகாப்புபடை போலீசார் அந்த ஆசாமியை ரெயிலில் தேடினர்.

அப்போது பக்கத்து பெட்டியில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டு இருந்தார். போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தனர். இதில், அவரிடம் ஒரு செல்போன் இருந்தது. அதுபற்றி விசாரித்தபோது, திருட்டு செல்போன் என்பது தெரியவந்தது.

அவர் மேற்படி பயணிகள் இருவரிடமும் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டார். 2 செல்போன்களில் ஒன்று கழிவறைக்கு சென்றபோது, தவறுதலாக கழிவறை கோப்பை துவாரத்தில் விழுந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்புபடை போலீசார் அந்த வாலிபரை பிடித்து ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், அவர் உல்லாஸ்நகரை சேர்ந்த பிரசாந்த் சாத்தே(வயது19) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story