திருட்டுத்தனமாக குடிநீரை உறிஞ்சிய 25 மோட்டார்கள் பறிமுதல்


திருட்டுத்தனமாக குடிநீரை உறிஞ்சிய 25 மோட்டார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Oct 2017 10:45 PM GMT (Updated: 20 Oct 2017 8:56 PM GMT)

திருவள்ளூரில் வீடுகளில் திருட்டுத்தனமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 25 மோட்டார்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். இதனால் நகராட்சி வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி உத்தரவின்பேரில், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் அறிவுறுத்தலின்படி நகராட்சி பணியாளர்கள் நேற்று திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுகிறதா? என திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

26–வது வார்டுக்குட்பட்ட பெரியகுப்பம் வள்ளலார் நகரில் நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் 25 பேர் திருட்டுத்தனமாக மின்மோட்டார்களை பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சியது கண்டறியப்பட்டது. இதனால் ஊழியர்கள் அந்த மின்மோட்டார்களை பறிமுதல் செய்து அவற்றை நகராட்சி வாகனத்தில் வைத்தனர்.

அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகராட்சி வாகனத்தை முற்றுகையிட்டனர். இதே பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழில் அதிபர்கள் வீடுகளில் திருட்டுத்தனமாக குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தும் மோட்டார்களை பறிமுதல் செய்யாமல், நடுத்தர மக்களின் வீடுகளில் மட்டும் மோட்டார்களை பறிமுதல் செய்வதை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

மேற்கொண்டு செல்லமுடியாதபடி நகராட்சி வாகனம் முன்பு அமர்ந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அனைத்து வீடுகளிலும் சோதனை செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆணையர் செந்தில்குமரன் கூறுகையில், திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் சட்டவிரோதமாக மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுகிறதா? என கண்டறிய குழு அமைக்கப்படும். இவர்கள் அனைத்து வார்டுகளிலும் ஆய்வு மேற்கொள்வார்கள். மின்மோட்டார்கள் மூலம் குடிநீரை உறிஞ்சினால் அவர்களின் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


Next Story