சம்பள பாக்கியை கொடுக்கும்படி கேட்ட பெண் துப்புரவு தொழிலாளிகளுக்கு பாலியல் தொல்லை


சம்பள பாக்கியை கொடுக்கும்படி கேட்ட பெண் துப்புரவு தொழிலாளிகளுக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 21 Oct 2017 4:01 AM IST (Updated: 21 Oct 2017 4:01 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், சம்பள பாக்கியை கொடுக்கும்படி கேட்ட பெண் துப்புரவு தொழிலாளிகளுக்கு

பெங்களூரு,

 பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பாக 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள ஒப்பந்ததாரரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே தேவசந்திரா, பசவனபுரா வார்டுகளில் குப்பைகள் அகற்றும் துப்புரவு தொழிலாளிகளுக்கு ஒப்பந்ததாரர் நாகேஷ் என்பவர் சம்பளம் வழங்கி வருகிறார். இவர், கடந்த 2 மாதங்களாக பெண் துப்புரவு தொழிலாளிகளுக்கு சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. சம்பளம் கொடுக்கும்படி அவர்கள் கேட்டாலும், அதை அவர் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

கடந்த வாரம் சம்பள பாக்கியை கொடுக்கும்படி கேட்ட பெண் துப்புரவு தொழிலாளிகளிடம் நாகேஷ் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. அதாவது, ‘உங்களின் சம்பளம் எனது ‘பேண்ட்’ பையில் உள்ளது. வந்து எடுத்து கொள்ளுங்கள்‘ என கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும், சம்பவம் குறித்து புகார் அளிப்பதாக கூறிய பெண் துப்புரவு தொழிலாளிகளுக்கு நாகேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், கற்பழித்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், மஞ்சுளா உள்பட சில பெண் துப்புரவு தொழிலாளர்களை ஆட்களை வைத்து அவர் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் துப்புரவு தொழிலாளிகள் சம்பவம் குறித்து துப்புரவு தொழிலாளர்கள் சங்கம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கே.ஆர்.புரம் போலீசில் புகார் செய்தனர். இருப்பினும், கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர். இதையடுத்து, பெங்களூரு மாநகராட்சியின் கே.ஆர்.புரம் பகுதி இணை கமி‌ஷனர் புகார் அளித்ததை தொடர்ந்து கே.ஆர்.புரம் போலீசார் நாகேஷ் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே, போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதை அறிந்த நாகேஷ் தலைமறைவானார். இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சியின் சமூக நலத்துறை பிரிவு அதிகாரிகள் போலீஸ் நிலையத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று காலையில் பெங்களூரு கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் சீமந்த் குமார் சிங், துணை போலீஸ் கமி‌ஷனர் அப்துல் அகாத் ஆகியோர் கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, பெண் துப்புரவு தொழிலாளிகளை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 7 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், தலைமறைவாக உள்ள ஒப்பந்ததாரர் நாகேசை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story