திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஒரு நபரின் பெயர் இருமுறை பதிவாவதை தடுக்க வேண்டும்


திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஒரு நபரின் பெயர் இருமுறை பதிவாவதை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Oct 2017 4:15 AM IST (Updated: 22 Oct 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஒரு நபரின் பெயர் இருமுறை பதிவாவதை தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சிறப்பு பார்வையாளர் அறிவுறுத்தினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் சமூக பாதுகாப்பு ஆணையர் ஆர்.லால்வேனா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில், வாக்காளர் வரைவு பட்டியல் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களிடம் சிறப்பு பார்வையாளர் கருத்து கேட்டறிந்தார்.

கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர் ஆர்.லால்வேனா பேசும்போது கூறியதாவது:-

மொத்த வாக்காளர்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 2018-ம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த 3-ந்தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் நகல்கள் மற்றும் குறுந்தகடு ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 10 லட்சத்து 84 ஆயிரத்து 693 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 86 ஆயிரத்து 801 பெண் வாக்காளர்களும், மற்றும் 244 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 21 லட்சத்து 71 ஆயிரத்து 738 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 7-ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டமும், இதர பகுதிகளில் குடியிருப்போர் நல சங்க கூட்டமும் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. 8-ந்தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடத்தப்பட்டுள்ளது.

இருமுறை பெயர் பதிவு

இன்று(நேற்று) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டமும், இதர பகுதிகளில் குடியிருப்போர் நல சங்க கூட்டமும் நடத்தப்படவுள்ளது. நாளை (இன்று) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொண்டு பெயர்களை சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தம் செய்ய மனுக்களை அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியல் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்படும். அதிகாரிகள் வாக்காளர் பெயர்களை சேர்க்கும் பணியில் மிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு நபரின் பெயர் இரு முறை பதிவாவதை தடுக்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை ஆராய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

6,573 விண்ணப்பங்கள்

கடந்த 3-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது கீழ்க்கண்டவாறு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அந்தவகையில் தாராபுரம்(தனி), காங்கேயம், அவினாசி(தனி), திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பெயர் சேர்த்தலுக்காக(படிவம் 6) 4,735 விண்ணப்பங்களும், பெயர் நீக்கலுக்கான(படிவம் 7) 404 விண்ணப்பங்களும், பெயர் திருத்தம் செய்ய (படிவம் 8) 941 விண்ணப்பங்களும், இடம் பெயர்தலுக்கு (படிவம் 8ஏ) 493 விண்ணப்பங்களும் என மொத்தம் 6 ஆயிரத்துக்கு 573 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சப் கலெக்டர் ஷ்ரவன்குமார், தாராபுரம் சப் கலெக்டர் கிரேஸ் பச்சாவு, திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அசோகன், உடுமலைப்பேட்டை ஆர்.டி.ஓ. அசோகன், தேர்தல் தாசில்தார் முருகதாஸ் உள்பட அனைத்து தாசில்தார்கள், மாநகராட்சி உதவி கமிஷனர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story