மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு: பால்வியாபாரி உடல் உறுப்புகள் தானம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு: பால்வியாபாரி உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 22 Oct 2017 4:15 AM IST (Updated: 22 Oct 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

மூளைச்சாவு ஏற்பட்ட காட்பாடி பால் வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது இதயம், நுரையீரல் ஹெலிகாப்டரில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வேலூர்,

காட்பாடியை அடுத்த தேவரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் சேட்டு (வயது 38). பால் வியாபாரி. இவருக்கு சித்ரா (35) என்ற மனைவி, ஜீவன் (7) என்ற ஒரு மகன், தீஷிகா (4) என்ற ஒரு மகள் உள்ளனர்.

சேட்டு கடந்த 19-ந் தேதி மோட்டார்சைக்கிளில் கழிஞ்சூர் நோக்கி சென்றார். அப்போது, இவரது மோட்டார்சைக்கிள் மீது எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக அவர் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் அவரது உடல் ஆபத்தான நிலையை அடைந்தது. இந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதை டாக்டர்கள் குழுவினர் உறுதி செய்தனர். இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.

இதன் மூலம் இதயம், 2 சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல், 2 கண்கள், கணையம் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. பின்னர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் பணியில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டனர்.

அதன்படி இதயம், நுரையீரல், ஒரு சிறுநீரகம், கணையம் ஆகிய உறுப்புகள் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கும், கல்லீரல், ஒரு சிறுநீரகம், கண்கள் வேலூர் சி.எம்.சி.மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டன.

இதயம், நுரையீரல் உள்ளிட்ட 4 உறுப்புகள் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு பிற்பகல் 3.30 மணி அளவில் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் ஹெலிகாப்டர் இறங்கியது.

இதையடுத்து பிரித்தெடுக்கப்பட்ட இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் ஆம்புலன்ஸ் மூலம் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் இருந்து சாலை மார்க்கமாக காட்பாடி ரோடு, புதிய பஸ் நிலையம் வழியாக வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்றனர்.

வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் மாலை 4.37 மணிக்கு இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் வைக்கப்பட்ட பெட்டி ஏற்றப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரு சிறுநீரகம், கணையம் ஆகிய உறுப்புகள் சாலை மார்க்கமாக ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையொட்டி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

இறந்த பின்னரும் பலருக்கு சேட்டு மறுவாழ்வு அளித்துள்ளதால், அவர்கள் மூலம் இன்னும் இந்த உலகில் சேட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story