வாலிபர் தாக்கியதில் மாணவியின் மூக்கு உடைந்தது வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு


வாலிபர் தாக்கியதில் மாணவியின் மூக்கு உடைந்தது வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு
x
தினத்தந்தி 22 Oct 2017 4:30 AM IST (Updated: 22 Oct 2017 4:00 AM IST)
t-max-icont-min-icon

குர்லாவில் கண்மூடித்தனமாக வாலிபர் தாக்கியதில் மாணவியின் மூக்கு உடைந்தது. இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

மும்பை குர்லா நேருநகர் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி சம்பவத்தன்று இரவு தனது தோழிகளுடன் டியூசன் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தாள். சிரஞ்சீவி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டோவில் அமர்ந்திருந்த வாலிபர்கள் சிலர் தங்களுக்குள் வாக்குவாதம் செய்து சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர்.

இதை கவனித்த மாணவி அருகில் சென்று, அவர்களிடம் சத்தம் போடாமல் இருக்கும்படி கூறினார். இது ஆட்டோவில் இருந்த வாலிபர் ஒருவருக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது.

இந்தநிலையில், மாணவி தோழிகளுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் சிறிது தூரத்தில் சென்று கொண்டிருந்த போது, ஆட்டோவில் இருந்து இறங்கி வந்த வாலிபர் ஒருவர் நடுரோட்டில் வைத்து, அந்த மாணவியை கண்மூடித்தனமாக தாக்கினார்.

இதில், மாணவியின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவர் வேதனை தாங்க முடியாமல் நிலைகுலைந்து விழுந்தார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த யாரும் தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர். பின்னர் மாணவி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

சம்பவம் குறித்து மாணவி நேருநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை தாக்கிய வாலிபரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் இம்ரான் சாகித் சேக் என்பது தெரியவந்தது.

அவர் மாணவியை கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.


Next Story