அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா செய்து கொடுத்த அதிகாரிகள் 5 பேர் பணி இடைநீக்கம்


அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா செய்து கொடுத்த அதிகாரிகள் 5 பேர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 22 Oct 2017 10:20 PM GMT (Updated: 22 Oct 2017 10:19 PM GMT)

சிவமொக்காவில், லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு நிலங்களை காலி இடங்கள் என அறிவித்து

சிவமொக்கா,

தனியாருக்கு பட்டா செய்து கொடுத்த அதிகாரிகள் 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சிவமொக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவமொக்கா மாநகராட்சி கூட்டம் கடந்த ஜூலை மாதம் 26–ந் தேதி நடந்தது. அப்போது கூட்டத்தில் பேசிய பா.ஜனதாவைச் சேர்ந்த கவுன்சிலர் மால்தேஷ், மாநகராட்சிக்கு சொந்தமான சொத்தை மாமன்ற கூட்டத்தின் ஒப்புதல் மூலமாகவோ, மாநில அரசின் உத்தரவின் பெயரிலோதான் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அதுதான் நடைமுறை ஆகும்.

ஆனால் மாநகராட்சி வருவாய்த்துறை உதவி ஆணையர் மற்றும் சில அதிகாரிகள் சேர்ந்து மாநகராட்சிக்கு சொந்தமான சொத்தை முறைகேடாக பெயர் மாற்றம் செய்து தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த ஊழல் குறித்து மாநில நகராட்சி துறைக்கு புகார் அனுப்பப்பட்டது.

புகாரின்பேரில் மாநில நகராட்சித்துறை அதிகாரிகள் இதுபற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவமொக்கா மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் யஷ்வந்த், ஜெகன்நாத், ரவிகுமார், அஞ்சனாமூர்த்தி, ஸ்ரீரங்கய்யா ஆகிய 5 பேரும் சிவமொக்கா மாநகராட்சி சார்பில் பூங்காக்கள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட அரசு இடங்களை, தனியாரிடம் இருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு காலி இடங்கள் என அறிவித்து, பின்னர் அவற்றை தனியாருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்தது தெரியவந்தது.

பின்னர் இந்த ஊழல் குறித்து அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். அதன்பேரில் ஊழலில் ஈடுபட்ட சிவமொக்கா மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் யஷ்வந்த், ஜெகன்நாத், ரவிகுமார், அஞ்சனாமூர்த்தி, ஸ்ரீரங்கய்யா ஆகிய 5 பேரையும் பணி இடைநீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை துணை ஆணையர் நாகராஜ், வசூல் அதிகாரி குருராஜ், வருவாய்த்துறையில் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ள ருக்மணி ஆகியோரிடமும் விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்ட சம்பவம் சிவமொக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story