3 ரவுடிகள் கொலை வழக்கு: குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
புதுவையில் 3 ரவுடிகள் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுவை முத்திரையர்பாளையத்தை சேர்ந்த ஞானசேகர் என்ற நாய் சேகர் (25), காந்திதிருநல்லூரை சேர்ந்த சதீஷ் (21), சண்முகாபுரத்தை சேர்ந்த ஜெரால்டு (22) ஆகிய 3 ரவுடிகள் தீபாவளி தினத்தன்று நள்ளிரவில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் மாமூல் வசூலிப்பது தொடர்பான பிரச்சினையில் இந்த கொலைகள் நடந்திருப்பது தெரியவந்தது. ஞானசேகரின் எதிர் அணியை சேர்ந்த மார்ட்டின், லாரன்ஸ், ஸ்டீபன் ஆகியோர் விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி தமிழரசன் மற்றும் அவரது கூட்டாளிகளை அழைத்து வந்து இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். அவர்கள் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் ரவுடி தமிழரசின் செல்போன் சிக்னல் சேலத்தை காட்டியது. இதனை தொடர்ந்து ஒரு தனிப்படை போலீசார் சேலம் விரைந்துள்ளனர். மேலும் கரூரில் உள்ள தமிழரசனின் சகோதரியிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது. 3 ரவுடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் இதுவரை ஒருவரை கூட கைது செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
இதற்கிடையே குற்றவாளிகள் கோர்ட்டில் சரண் அடைய முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கோர்ட்டில் சரண் அடைவதற்கு முன்பு அவர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புதுவை, விழுப்புரம், கடலூர் கோர்ட்டுகள் முன்பு தனிப்படை போலீசார் இன்று(திங்கட்கிழமை) சாதாரணை உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர். குற்றவாளிகள் தமிழக பகுதியில் பதுங்கி இருப்பதால் அவர்களை கைது செய்ய தமிழக போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.