விவசாயத்தை மத்திய அரசின் பட்டியலில் சேர்த்தால் விவசாயமும், விவசாயிகளும் அழிவது உறுதி வைகோ பேச்சு
விவசாயத்தை மத்திய அரசின் பட்டியலில் சேர்த்தால் விவசாயமும், விவசாயிகளும் அழிவது உறுதி என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
கோவில்பட்டி,
விவசாயத்தை மத்திய அரசின் பட்டியலில் சேர்த்தால் விவசாயமும், விவசாயிகளும் அழிவது உறுதி என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
ஆர்ப்பாட்டம்கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மானாவாரி விவசாய பயிர்களுக்கு பயிர் காப்பீடு நிவாரணத்தொகை வழங்க வலியுறுத்தி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் எதிரில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:–
விவசாயத்தை மத்திய அரசின் பட்டியலில் சேர்க்க...தமிழக விவசாயிகள் தங்களது கோரிக்கைகளுக்காக புதுடெல்லியில் சென்று பல மாதங்களாக போராடியும் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது. இதற்கிடையே விவசாயத்தை மத்திய அரசின் பட்டியலில் சேர்க்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அவ்வாறு செய்தால் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளுக்காகவும், நிவாரணத்துக்காகவும் மத்திய அரசையே சார்ந்து இருக்க நேரிடும். இதன் மூலம் விவசாயமும், விவசாயிகளும் அழிவது உறுதி. விவசாயத்தை பெரு வணிக நிறுவனத்தினர் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றி விடுவார்கள்.
சீமை கருவேல மரங்கள் காற்றின் ஈரப்பதத்தையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சுவதால் கடும் வறட்சி ஏற்படுகிறது. எனவே அதனை வேருடன் அகற்றுவதற்கு ஐகோர்ட்டில் முறையிட்டு வெற்றி கண்டேன். ஆனாலும் சிலருக்கு சீமை கருவேல மரங்கள் வாழ்வாதாரமாக விளங்குவதாக கூறி, வனத்துறையினர் மேல்முறையீடு செய்து இடைக்கால தடை உத்தரவு பெற்றனர். இதற்கிடையே நான் சிறைக்கு சென்றதால், மீண்டும் வழக்கை தொடர முடியவில்லை. தொடர்ந்து சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு மீண்டும் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்வேன்.
போராட்டங்கள் தொடரும்விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, நாங்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்த பின்னர் நெற்பயிருக்கு மட்டும் நிவாரணம் வழங்குவதாக அறிவித்து உள்ளனர். இதேபோன்று மானாவாரி விவசாய பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகையை வழங்கினால்தான் விவசாயிகள் மீண்டும் பயிரிட முடியும். விவசாயிகள் மீண்டும் பயிரிடுவதற்கு பயிர் கடன்களையும் வழங்க வேண்டும். இங்குள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. விவசாயிகளின் குரல் மத்திய அரசுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
விபத்தில் ஒருவர் இறந்தால்கூட ஒரு மாதத்தில் நிவாரணம் கிடைத்து விடுகிறது. ஆனால் விவசாயத்தில் நஷ்டம் அடைந்த விவசாயி தற்கொலை செய்தால், அவரது குடும்பத்தினருக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு மாறி விட்டது. விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிவாரணத்தொகை வழங்கும் வரையிலும், பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
விவசாயத்தில் நஷ்டம் அடைந்த விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்து உள்ளன. ஆனால் அதனை தமிழக அரசு மூடி மறைக்கிறது. நமது நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தை அழிக்க முயற்சி செய்து வருகின்றனர். விவசாயத்தை மத்திய அரசின் பட்டியலில் சேர்த்தால், விவசாயமும், விவசாயிகளும் அழிவது உறுதி. பன்னாட்டு பெருவணிக நிறுவனங்கள் விவசாயத்தை கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றி விடுவார்கள். இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.
நிர்வாகிகள்ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.ரமேஷ் (தூத்துக்குடி), நிஜாம் (நெல்லை மாநகர்), ராஜேந்திரன் (நெல்லை புறநகர்), சண்முகசுந்தரம் (விருதுநகர்), முன்னாள் எம்.பி.யும், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினருமான ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. சதன் திருமலைகுமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் அழகர்சாமி, கார்த்திகேயன், நகர இளைஞர் அணி சயலாளர் லவராஜா,
மாநில கலைத்துறை இணை செயலாளர் பொன் ஸ்ரீராம், மாநில விவசாய அணி துணை செயலாளர் வரதராஜன், செயற்குழு உறுப்பினர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கொம்பையா, தெய்வேந்திரன், விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பொன் ராமசுப்பு, மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து பாதிப்புஇதனால் அண்ணா பஸ் நிலையம் எதிரில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வைகோவுக்கு விவசாயி ஒருவர் கலப்பையை வழங்கினார். அதனை தோளில் தூக்கி வைத்தவாறு வைகோ சிறிதுநேரம் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்சுக்கு வழிவிடுமாறு வைகோ கூறினார். உடனே ஆம்புலன்ஸ் செல்வதற்கு ம.தி.மு.க. தொண்டர்கள் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.