பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி திருவாடானையில் சாலை மறியல் போராட்டம்


பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி திருவாடானையில் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2017 4:00 AM IST (Updated: 31 Oct 2017 11:50 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி திருவாடானையில் சாலை மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தொண்டி,

திருவாடானையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுகா நிர்வாகிகள் கூட்டம் தாலுகா தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்துராமு, தாலுகா செயலாளர் சேதுராமு, துணை தலைவர் நாகநாதன், துணை செயலாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் திருவாடானை தாலுகாவில் 2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்கும் பட்டியலில் 14 வருவாய் கிராமங்களும், மாவட்டத்தில் 51 வருவாய் கிராமங்களும் விடுபட்டுள்ளது.

மேலும் வேளாண்மை துறை மூலம் பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

அப்போது அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீதம் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் இதுநாள் வரை அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததுடன், எவ்வித அறிவிப்பும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்படவில்லை. எனவே விடுபட்ட விவசாயிகளுக்கு 100 சதவீதம் பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி திருவாடானை அருகே உள்ள சி.கே.மங்கலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் 2016-17-ம் ஆண்டுக்கான வறட்சி நிவாரணம் திருவாடானை தாலுகாவில் மட்டும் சுமார் 3 ஆயிரம் விவசாயிகளுக்கு இதுநாள் வரை வழங்கப்படவில்லை. மேலும் திருவாடானை தாலுகாவில் 2017-18-ம் ஆண்டுக்கான விவசாய பணிகள் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அனைவரும் உரிய ஆவணங்களை பெற்று காலம் தாழ்த்தாமல் இந்த மாத இறுதிக்குள் பயிர் காப்பீடு செய்ய பிரீமியம் செலுத்த வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story