அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
திருப்பூர் மாநகராட்சியின் 52–வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி 52–வது வார்டு பகுதியை சேர்ந்த 40–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். ஆணையாளர் அலுவலகத்தில் இல்லாததால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் அலுவலக வாசலில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் உதவி ஆணையாளர் கண்ணன் மற்றும் உதவி பொறியாளர் கவுரிசங்கர் ஆகியோர் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–
கருப்பகவுண்டன்பாளையம், அமராவதி நகர், லட்சுமிநகர், கல்லாங்காடு, திருக்குமரன் நகர், வள்ளலார் நகர், அம்மன் நகர், மூகாம்பிகை நகர், குறும்ப குட்டை, வேலன் நகர், ஜனசக்தி நகர், ஆதிதிராவிடர் காலனி, அபிராமிநகர், வெங்கடேஷ்வரா நகர், பூங்கா நகர், சபரி நகர், வஞ்சிநகர் ஆகிய பகுதிகளில் தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
இந்த குழிகளில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாக காரணமாகிறது. வள்ளலார் நகர், கல்லாங்காடு செல்லும் சாலையில் நீண்ட நாட்களாக கழிவுநீர் செல்கிறது. அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் தேங்கியுள்ளது. குப்பை தொட்டிகள் வைக்கப்படுவதில்லை. தெருவிளக்குகள் எரிவதில்லை.
குடிநீர் 12 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படுகிறது. சாக்கடை கால்வாய் வசதியில்லாததால் சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. வார்டு பிரச்சினைகளை தெரிவித்தாலும் இதுவரை நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் எங்கள் வார்டுக்கு வந்து ஆய்வு செய்து குறைகளை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட உதவி ஆணையாளர் கண்ணன் உடனடியாக பொதுமக்களுடன் 52–வது வார்டுக்கு சென்று ஆய்வு செய்தார்.