திருவொற்றியூர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி


திருவொற்றியூர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 1 Nov 2017 4:15 AM IST (Updated: 1 Nov 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்று அதிகாலை வரை கொட்டி தீர்த்த மழையால் ஜோதிநகர், சத்தியமூர்த்தி நகர், முருகப்பா நகர், ஜெய்ஹிந்த் நகர், ராஜாஜி நகர், கார்கில் நகர் போன்ற பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது.

மேலும், தாழ்வான பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர். ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி வரும் இந்த வேளையில் வீடுகளுக்குள் மழைநீருடன், கழிவுநீரும் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. ராஜாஜி நகரில் தேங்கி இருந்த மழைநீரில் சிறுவர்கள் சிலர் மீன்பிடித்து விளையாடினார்கள்.

இந்த பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் ஜோதி நகரில் உள்ள பிரதான மழைநீர் கால்வாய் வழியாக பக்கிங்காம் கால்வாயை சென்றடைய வேண்டும். ஆனால் பெரும்பாலான மழைநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளிலேயே தேங்கி உள்ளது.

மணலி விரைவு சாலையில் வெள்ள நீர் ஆறாக ஓடியது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. ராஜாஜி நகர் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் சென்று பார்வையிட்டார்.

மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.

கடும் மழை காரணமாக திருவொற்றியூர் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருவொற்றியூர், எண்ணூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.


Next Story