பிரபல நடிகர்களின் சொகுசு கார் பதிவு விவகாரம்: போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பெடி அதிரடி ஆய்வு


பிரபல நடிகர்களின் சொகுசு கார் பதிவு விவகாரம்: போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பெடி அதிரடி ஆய்வு
x
தினத்தந்தி 1 Nov 2017 5:15 AM IST (Updated: 1 Nov 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் சொகுசு கார்களை பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்வதாக எழுந்துள்ள புகார்களை தொடர்ந்து போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பெடி அதிரடியாக ஆய்வு செய்தார்.

புதுச்சேரி,

சென்னையில் கடந்த ஆண்டு பிரபல நடிகை அமலாபால் வெளிநாட்டு கார் ஒன்றை வாங்கினார். இந்த காரின் விலை ரூ.1 கோடியே 12 லட்சம் ஆகும். இந்த காரை புதுவை திலாஸ்பேட்டை செயிண்ட் தெரசா வீதி என்று போலியாக முகவரி கொடுத்து புதுவை போக்குவரத்து அலுவலகத்தில் நடிகை அமலாபால் பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்பின் அந்த காரை கேரளாவுக்கு கொண்டு சென்று அவர் பயன்படுத்தி வருகிறார். வேறு மாநிலத்தில் பதிவு செய்து இருந்தாலும் காரை கேரளாவிலும் பதிவு செய்யவேண்டும் என்று அங்கு வாகன சட்டம் உள்ளது. இந்த விவகாரத்தில் நடிகை அமலாபால் சுமார் ரூ.20 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கேரள அதிகாரிகள் புதுவை போக்குவரத்து அதிகாரிகளுடன் விசாரித்தனர். இந்தநிலையில் மலையாள நடிகர் பகத் பாஷிலும் புதுச்சேரி லாஸ்பேட்டை, புதுப்பேட்டை முகவரியை கொடுத்து காரை பதிவு செய்து இருப்பது அம்பலமாகி உள்ளது.

மேலும் நடிகர் சுரேஷ் கோபி எல்லைப்பிள்ளைசாவடி பகுதி முகவரியை கொடுத்து சொகுசு காரை பதிவு செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தொடர் வரி ஏய்ப்பு மோசடி புகாரால் புதுச்சேரி போக்குவரத்து அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற மோசடியில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி யார், யார் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்து அவர்கள் விசாரிக்க தொடங்கி உள்ளனர். இதனால் நடிகர், நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் ஓடும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள ஆம்னி பஸ்களுக்கு மட்டுமே மீண்டும் உரிமம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. புதிய ஆம்னி பஸ்களை பதிவு செய்ய அனுமதிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாகவும் பதிவு செய்வதற்கான கட்டணம் குறைவு என்பதாலும் புதுச்சேரியில் தற்காலிக முகவரி கொடுத்து ஏராளமான ஆம்னி பஸ்களை பதிவு செய்து உள்ளனர். இதனால் ஆம்னி பஸ் உரிமையாளர் களுக்கும் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி நேற்று 100 அடி ரோட்டில் உள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்துக்கு சென்றார். சொகுசு கார்களை நடிகர்கள் புதுவையில் பதிவு செய்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். மேலும் அலுவலகத்தில் உள்ள கோப்புகளையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு தொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ஆய்வின்போது புகார்கள் உண்மை என்று தெரிய வந்துள்ளது. புதுவையில் குறைவான சாலை வரி என்பதால் வாகனங்களை இங்கு பதிவு செய்து விதிமுறை மீறல்கள் நடந்துள்ளது.

புதுவை மாநிலம் இதுபோன்ற வருமானங்களை நம்பியுள்ளது. இதில் மோசடி நடக்கிறது. இதுதொடர்பாக நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். புதுவை பிராந்தியத்தில் 75 ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் எந்தவிதமான வசதி யும் இல்லை. அவர்கள் போக்குவரத்து துறையின் புரோக்கர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
1 More update

Next Story