நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்தேன் கைதான லாரி டிரைவர் வாக்குமூலம்
விளாத்திகுளத்தில், மனைவியின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளத்தில், மனைவியின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக கூறியுள்ளார்.
அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு மனைவி கொலைதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவை சேர்ந்தவர் அழகுசுந்தரம்(வயது 32). லாரி டிரைவர். இவருடைய மனைவி சண்முகபிரியா(22). இவர்களுக்கு கிருபா(4) என்ற மகள் உள்ளார். அழகுசுந்தரம் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் அழகுசுந்தரம் மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்த அழகுசுந்தரம் அம்மிக்கல்லை எடுத்து தன்னுடைய மனைவியின் தலையில் போட்டு கொலை செய்தார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுசுந்தரத்தை கைது செய்தனர்.
கைதான அழகுசுந்தரம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
நடத்தையில் சந்தேகம்சண்முகபிரியா என்னுடைய சொந்த அக்காள் மகள் ஆவார். எங்களுக்கு கடந்த 2011–ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனக்கு கஞ்சா மற்றும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நான் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தேன். இதனால் சண்முகபிரியா கடந்த 2 ஆண்டுகளாக விளாத்திகுளத்தில் உள்ள ஸ்டூடியோவில் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார். ஆனாலும் நான் அடிக்கடி மதுகுடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தேன். மேலும் நான் என்னுடைய மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டேன்.
சம்பவத்தன்று இரவில் நான் மதுகுடித்து விட்டு எனது வீட்டுக்கு சென்றேன். அங்கு வழக்கம்போல் அவரிடம் தகராறு செய்தேன். அப்போது ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து மனைவியின் தலையில் தூக்கிப்போட்டு கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.
கைது செய்யப்பட்ட அழகுசுந்தரத்தை போலீசார் விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.