ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்க யாரும் இல்லாததால் மதுரை ரெயிலில் ஆயிரம் பேர் ஓசி பயணம்
ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோர் நமது நாட்டில் ஏராளமானோர் உண்டு.
ராமேசுவரம்,
ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோர் நமது நாட்டில் ஏராளமானோர் உண்டு. இவர்கள் டிக்கெட் பரிசோதர்களிடம் பிடிபட்டு அபராதம் செலுத்தும் நிலைக்கும் தள்ளப்படுவார்கள்.
ஆனால் ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த ருசிகர சம்பவம் தமிழகத்தில் நேற்று அரங்கேறி உள்ளது. அதற்கு பயணிகள் காரணம் அல்ல, ரெயில்வே நிர்வாகம் என்றால் ஆச்சரியமாக இருக்கும்.
ராமேசுவரத்தில் இருந்து 161 கி.மீ. தொலைவில் உள்ள மதுரைக்கு ராமேசுவரம்–மதுரை பாசஞ்சர் நேற்று காலை 5.30 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. அந்த ரெயிலை பிடிப்பதற்காக ஏராளமான பயணிகள் டிக்கெட் எடுக்க ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் முன்பாக வெகுநேரம் காத்திருந்தனர். ஆனால் ரெயில் அங்கு டிக்கெட் கொடுப்பதற்கு ரெயில்வே ஊழியர் வரவில்லை.
உடல் நலம் சரியில்லாததால் அந்த ஊழியர் பணிக்கு வரவில்லை எனவும் இதுபற்றி அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரெயில் கிளம்பும் நேரம் நெருங்கியது. இதனால் வேறு வழியின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் டிக்கெட் எடுக்காமலேயே மதுரைக்கும், வழியில் உள்ள ரெயில் நிலையங்களுக்கும் பயணம் மேற்கொள்ள ரெயில் ஏறினர். கடைசிவரை அவர்கள் யாரும் டிக்கெட் எடுக்காமல் ஓசியாகவே பயணம் செய்துள்ளனர்.
இதுபற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “ராமேசுவரம் ரெயில் நிலைய கவுண்ட்டரில் டிக்கெட் கொடுக்கும் ஊழியர்கள் யாரும் இன்று(அதாவது நேற்று) காலை பணியில் இல்லாததால் ஆளில்லாமல் இருந்துள்ளது. எனவே பயணிகளும் டிக்கெட் எடுக்காமலேயே ரெயிலில் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மதுரை மண்டல ரெயில்வே மேலாளருக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது“ என்றார்.