திருப்பாலைக்குடி அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
திருப்பாலைக்குடி அருகே வாலிபரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே உள்ளது ஏ.மணக்குடி. இந்த ஊரைச்சேர்ந்த ராசு என்பவரின் மகன் ராமநாதன்(வயது24). கடல்தொழிலுக்கு சென்று வந்த இவர் பின்னர் வேலைக்கு செல்லவில்லையாம். இந்நிலையில் கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் 11–ந் தேதி ராமநாதன் வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்தாராம். அப்போது அந்த வழியாக சென்ற அதேபகுதியை சேர்ந்த சோக்குத்தேவர் என்பவரின் மகன் சரவணக்குமார்(22) என்பவர் ராமநாதனிடம் வேலைக்கு செல்லாமல் இருப்பது குறித்து கேட்டு கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராமநாதன் சரவணக்குமாரை தாக்கினாராம். இதன்காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் அங்கிருந்து சென்ற சரவணக்குமார் தனது நண்பரான அதேபகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் தினேஷ்பாபு(24) என்பவரிடம் நடந்த விவரங்களை கூறி தன்னை தாக்கிய ராமநாதனை பழிக்குபழி வாங்க வேண்டும் என்று கூறியுள்ளர்.
இதற்காக நேரம் பார்த்து காத்திருந்த 2 பேரும் நள்ளிரவில் ராமநாதன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு ராமநாதன் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக ராமநாதனின் தாய் பஞ்சவர்ணம் திருப்பாலைக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமார், தினேஷ்பாபு ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் வாலிபர்கள் சரவணக்குமார், தினேஷ்பாபு ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கேடசன் ஆஜரானார்.