திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்புகளை கண்டித்து திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்,
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் அருகே, அந்த கட்சியின் கொடி சேதப்படுத்தப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கினார்.
மேலும் மாவட்ட செயலாளர் பாண்டி, நகர செயலாளர் ஆசாத் மற்றும் நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், அரபுமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கட்சிக் கொடியை சேதப்படுத்தியதற்காக பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோஷமிட்டனர்.
பின்னர் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவற்றின் பெயர்கள் எழுதப்பட்ட உருவபொம்மையை தீவைத்து எரித்து கோஷமிட்டனர். இதை தடுக்க திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் முயற்சி செய்தனர்.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போலீசாரை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.