கர்நாடக மக்கள் காங்கிரஸ் பக்கம் உள்ளனர் எடியூரப்பாவின் பயண தொடக்க கூட்டம் முதல் நாளிலேயே தோல்வி


கர்நாடக மக்கள் காங்கிரஸ் பக்கம் உள்ளனர் எடியூரப்பாவின் பயண தொடக்க கூட்டம் முதல் நாளிலேயே தோல்வி
x
தினத்தந்தி 3 Nov 2017 2:30 AM IST (Updated: 3 Nov 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

எடியூரப்பாவின் பயண தொடக்க கூட்டம் முதல் நாளிலேயே தோல்வி அடைந்துவிட்டது என்றும், கர்நாடக மக்கள் காங்கிரஸ் பக்கம் இருக்கிறார்கள் என்றும் சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

எடியூரப்பாவின் பயண தொடக்க கூட்டம் முதல் நாளிலேயே தோல்வி அடைந்துவிட்டது என்றும், கர்நாடக மக்கள் காங்கிரஸ் பக்கம் இருக்கிறார்கள் என்றும் சித்தராமையா கூறினார்.

முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

நாற்காலிகள் காலியாக இருந்தன

பா.ஜனதா கட்சி பரிவர்த்தனா யாத்திரை(மாற்றத்திற்கான பயணம்) தொடக்க கூட்டத்திற்கு பா.ஜனதா மிகப்பெரிய அளவில் முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொண்டது. 3½ லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று பா.ஜனதா தலைவர்கள் அறிவித்தனர். ஷோபா எம்.பி., ஆர்.அசோக் ஆகியோர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தனர்.

ஆனால் இன்று(அதாவது நேற்று) நடைபெற்ற பா.ஜனதா கூட்டத்தில் கூட்டம் மிக குறைவாக இருந்தது. நாற்காலிகள் காலியாக இருந்தன. இதன் மூலம் மக்கள் தாங்கள் பா.ஜனதா பக்கம் இல்லை என்று கூறியுள்ளனர். கர்நாடக மக்கள் காங்கிரசை ஆதரிக்கிறார்கள். எங்கள் கட்சி(காங்கிரஸ்) பக்கம் தான் மக்கள் உள்ளனர்.

மக்களின் ஆதரவு கிடைக்காது

மதவாதிகள் மதசார்பற்ற கொள்கையின் பக்கம் திரும்ப வேண்டும். பா.ஜனதாவினர் என்ன செய்தாலும், அவர்களின் மாற்றத்திற்கான பயணத்திற்கு மக்களின் ஆதரவு கிடைக்காது. அந்த பயணத்தின் முதல் நாளே அது தோல்வி அடைந்துள்ளது. கிராமங்களுக்கு சென்றால் மக்கள் விரட்டியடிப்பார்கள். கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களை அரசு தடுத்துவிட்டது என்று பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். கூட்டத்திற்கு வராதவர்களை அரசு எப்படி தடுக்க முடியும்?.

பா.ஜனதா முன்பு மங்களூருவுக்கு மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை மேற்கொள்ள முயற்சி செய்தது. மத நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்பதால் அதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களை நாங்கள் தடுக்கவில்லை. இதில் பா.ஜனதாவினர் அரசியல் செய்வது சரியல்ல. திப்பு ஜெயந்தி பற்றி அமித்ஷா குறை கூறி பேசி இருக்கிறார்.

கணக்கு தெரியுமா?

எங்கள் மாநிலத்தின் நீர், நிலம், மொழி வி‌ஷயங்களில் எங்களுக்கு அபாரமான அக்கறை உள்ளது. ராஜ்யோத்சவா பற்றி அமித்ஷா போன்றவர்கள் எங்களுக்கு பாடம் கற்பிக்க தேவை இல்லை. ராஜ்யோத்சவாவை எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் கொண்டாடுகிறோமோ, அதே அளவுக்கு திப்பு ஜெயந்தி உள்பட 26 மகான்களின் ஜெயந்திகளையும் நாங்கள் கொண்டாடுகிறோம்.

நாங்கள் வரலாற்று நாயகர்களை எப்போதும் நினைவு கூறுகிறோம். ஆனால் பா.ஜனதாவினர் வரலாற்றை திரித்து கூறுபவர்கள். மத்திய அரசு ரூ.2½ லட்சம் கோடியை கர்நாடக அரசுக்கு கொடுத்துள்ளதாக அமித்ஷா கூறியுள்ளார். அவருக்கு கணக்கு தெரியுமா? என்று எனக்கு தெரியவில்லை.

வரி வருவாயில் நமக்கான பங்கு

மத்திய அரசு கர்நாடகத்திற்கு கொடுக்கும் பணம், அமித்ஷாவுக்கோ அல்லது அவருடைய மகனுக்கோ சொந்தமானது அல்ல. பல்வேறு வழிகளில் கர்நாடகத்தில் இருந்து மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் நமக்கான பங்கு தொகையை கொடுக்கிறது. இது அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும் நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி நிதி ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

எடியூரப்பாவின் இந்த பயணம் தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “மக்களின் ஆதரவு கிடைக்காததால், அமித்ஷா கர்நாடக அரசை வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு சென்று இருக்கிறார். அவர் கூறியதில் உண்மை இல்லை. மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க தயாராக இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது’’ என்றார்.


Next Story