மழை வெள்ளம் குறித்து 9 தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறைகளிலும் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்


மழை வெள்ளம் குறித்து 9 தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறைகளிலும் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2017 10:30 PM GMT (Updated: 2 Nov 2017 8:21 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் மழைசேதங்கள் குறித்து 9 தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறைகளிலும் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.

தஞ்சாவூர்,

மழை, வெள்ளம் மற்றும் புயல் வருவதற்கு முன்னர் தாழ்வான பகுதிகளில் குடியிருப்போர் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் பாதையை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். முக்கியமான ஆவணங்களான (கல்விச்சான்றுகள், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, சொத்து பத்திரங்கள் போன்றவை) சேர்த்து மேற்கூரையில் வைக்கவும், பேட்டரி பொருத்தப்பட்ட ரேடியோ, டார்ச்லைட், கயறு, குடை ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அவசர காலத்திற்கு தேவையான உலர்ந்த உணவுகள், பிஸ்கட் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உணவுப்பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். குறைந்த அளவிலான மாற்று உடைகளை நீர் புகாத பாலிதீன் பைகளில் வைத்துக்கொள்ள வேண்டும். வெள்ளநீர் பாதாள சாக்கடை குழாய் வழியாக வீட்டிற்குள் புகுந்துவிடாதவாறு வால்வுகளை மூடி வைக்க வேண்டும். வெள்ளநீர் அதிகமாகி வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்தால் வேகமாக செல்லும் வெள்ளநீருக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும். வதந்திகளை நம்பாமலும், வதந்திகளை பரப்பாமலும் இருக்க அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் நம்ப வேண்டும்.

தவிர்க்க வேண்டும்

மழை வெள்ள காலங்களில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது. அவ்வாறு மின்கம்பிகள் அறுந்து கிடப்பது தெரிந்தால் உடன் அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் வாரியம் தொடர்பான புகார்களை 04362-237448 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இடிந்து விழும் நிலையில் உள்ள பாதுகாப்பற்ற கட்டிடங்களில் தங்குவதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் அதிகம் தேங்கி உள்ள பகுதிகளில் பயணம் செய்யக்கூடாது.

ஆறு மற்றும் வாய்க்கால்களில் வரும் வெள்ளநீரை அப்படியே குடிக்கக்கூடாது. இடி மின்னல் வரும் போது மரங்களின் கீழ் நிற்கக்கூடாது. அதிக அளவிலான வெள்ளம் பெரும் போது வெள்ளநீருக்குள் செல்லாமலும், வெள்ளகாலங்களில் ஆறு மற்றும் வாய்க்கால்களில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை வெள்ளநீருக்குள் செல்லாமலும், பாதுகாக்கவும், சுகாதாரமற்ற உணவுப்பண்டங்களை உண்ணக்கூடாது. காய்ச்சிய நீர் மற்றும் சூடான உணவுப்பண்டங்களையே உண்ண வேண்டும்.

கட்டுப்பாட்டு அறை

மேலும் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணிற்கோ அல்லது அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கோ கீழ்கண்ட எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம்.

தாசில்தார் அலுவலகங்கள் தஞ்சை 04362-230456, திருவையாறு- 04362-260248, ஒரத்தநாடு 04362-233225, பூதலூர் 04362-288107, கும்பகோணம் 0435-2430227, பாபநாசம் 04374-222456, திருவிடைமருதூர் 0435-2460187, பட்டுக்கோட்டை 04373-235049, பேராவூரணி 04373-232456.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். 

Next Story