பழனி அருகே குளம் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


பழனி அருகே குளம் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 2 Nov 2017 11:00 PM GMT (Updated: 2 Nov 2017 9:52 PM GMT)

பழனி அருகே குளம் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

பழனி,

பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சி உள்ளது. இப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல், தென்னை, வாழை மற்றும் கொய்யா போன்றவைகள் பயிரிடப்படுகிறது. இங்கு பெரியகுளம் என்ற தாய் குளம் உள்ளது.

இந்த குளம் பொதுப்பணித்துறையினரால் பராமரிக்கப்படுகிறது. இக்குளம் நிரம்பிய பின்னர் அதன் மூலம் ஆயக்குடி பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. கடந்த ஆண்டுகளில் இப்பகுதியில் உள்ள குளங்களின் வாய்க் கால்கள் தூர் வாரப்படவில்லை. இதன் காரணமாக பெரியகுளமும் தூர்வாரப்படாததால் தண்ணீர் விரைவாக நிறைந்தது.

கரையில் உடைப்பு

பெரியகுளத்தில் இருந்து வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் குமாரநாயக்கன் குளம், பொன்னாபுரம் குளம் போன்ற குளங்களுக்கு செல்ல வேண்டும். நேற்று குமாரநாயக்கன் குளத்தின் கரையில் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீர் பெருக்கெடுத்து வாய்க் கால்களில் நிரம்பி பழைய ஆயக்குடி 1-வது வார்டு ஜோதிநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு தாசில்தார் ராஜேந்திரன் விரைந்து சென்று குளத்தின் மடைகளை அடைக்க உத்தரவிட்டார் மேலும் வருவாய்த்துறையினர் சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Related Tags :
Next Story