தாரமங்கலம் அருகே வியாபாரி வீட்டில் ரூ.1 லட்சம் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
தாரமங்கலம் அருகே வியாபாரி வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை, வெள்ளி பொருட்களை திருடி விட்டு வெளியே வந்த திருடர்கள் பொதுமக்களை கண்டதும் அவர்கள் வந்த காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தாரமங்கலம்,
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி பாவடி தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது32). வியாபாரியான இவர் தொழில் விஷயமாக கடந்த 6 மாதத்துக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு ஐதராபாத்திற்கு சென்றார்.
இந்தநிலையில் வீடு பூட்டிக்கிடப்பதை அறிந்த மர்ம மனிதர்கள் 2 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு காரில் வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்து 2 பவுன் நகை, வெள்ளிபொருட்கள் ஆகியவற்றை திருடினர். இதையடுத்து திருடர்கள் அவற்றை 2 பைகளில் போட்டுக் கொண்டு வெளியில் வந்தனர்.
முன்னதாக திருடர்கள் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சுதாரித்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் திருடர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடிக்க சரவணன் வீட்டுக்கு திரண்டு வந்தனர். அப்போது வெளியில் பொதுமக்கள் நிற்பதை அறிந்து திருடர்கள் 2 பேரும் அவர்கள் வந்த காரை அங்கேயே விட்டு விட்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் விசாரணையில் திருட்டு போன நகை மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் என தெரியவந்துள்ளது.
மேலும் திருடர்கள் அங்கேயே விட்டுச் சென்ற காரை போலீசார் கைப்பற்றி அதை பறிமுதல் செய்தனர். அந்த காரில் ஒரு நம்பர் பிளேட்டின் மேல் மற்றொரு நம்பர்பிளேட் பொருத்தப்பட்டு அது தொங்கியவாறு இருந்தது. எனவே இது திருட்டு காராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும் காரில் இருந்த இரண்டு நம்பர் பிளேட்டுகளில் உள்ள பதிவெண்களை வைத்து திருட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.