ஆன்லைனில் தவறான தகவல் கொடுத்து கார் விற்பனை: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க தனியார் வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


ஆன்லைனில் தவறான தகவல் கொடுத்து கார் விற்பனை: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க தனியார் வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Nov 2017 3:30 AM IST (Updated: 3 Nov 2017 11:24 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைனில் தவறான தகவல் கொடுத்து கார் விற்பனை செய்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தனியார் வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை டி.வி.எஸ்.நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

2007–ம் ஆண்டு மாடல் கார் ஒன்று கடனுக்காக மீட்கப்பட்டு விற்பனைக்கு உள்ளதாக தனியார் வங்கி சார்பில் ஆன்லைனில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதன்பேரில் தரகர் மூலம் தனியார் வங்கியை தொடர்பு கொண்டு ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்துக்கு அந்த காரை வாங்கினேன். அப்போது அந்த காரின் அசல் ஆர்.சி. புத்தகம் என்னிடம் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் அந்த காரை பழுதுபார்க்க மெக்கானிக்கிடம் கொடுத்தேன். அவர் அந்த கார், 2003–ம் ஆண்டு மாடல் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான், இதுகுறித்து வங்கி தரப்பினரிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் சரியான பதில் கூறவில்லை.

இதனையடுத்து அந்த காரின் முன்னாள் உரிமையாளரை சந்தித்து காரின் அசல் ஆவணத்தை தருமாறு கேட்டேன். அதை அவர் அடகு வைத்திருப்பதாக தெரிவித்தார். பின்னர் தான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன்.

எனவே 2003–ம் ஆண்டு மாடல் காரை 4 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2007–ம் ஆண்டில் வெளிவந்ததாக கூறி என்னிடம் விற்பனை செய்ததால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வங்கி நிர்வாகத்தினர் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, மறைக்காமலை ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கில் வங்கியின் சேவை குறைபாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தனியார் வங்கிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story