ரூ.70 லட்சம் கொள்ளை வழக்கில் வங்கி மேலாளர் அதிரடி கைது


ரூ.70 லட்சம் கொள்ளை வழக்கில் வங்கி மேலாளர் அதிரடி கைது
x

சோலாப்பூரில் வங்கிக்கு சொந்தமான ரூ.70 லட்சம் கொள்ளை வழக்கில், அதே வங்கி மேலாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சோலாப்பூர்,

சோலாப்பூர் சங்கோலா பகுதியில் உள்ள ‘பாங்க் ஆப் மகாராஷ்டிரா’ வங்கியில் இருந்து, பண்டர்பூர் கிளைக்கு சம்பவத்தன்று பகல் 1.30 மணியளவில் ரூ.70 லட்சம் ரொக்கப்பணம் வேன் மூலம் எடுத்து செல்லப்பட்டது. வேனில் வங்கி ஊழியர்களும், பாதுகாவலரும் இருந்தனர். வழியில் ஜீப் ஒன்று திடீரென வேனின் பின்புறம் மோதியது. இதனால், டிரைவர் வேனை உடனடியாக நிறுத்தினார்.

அப்போது, ஜீப்பில் இருந்து இறங்கிய மர்ம ஆசாமிகள், திபு திபுவென வேனுக்குள் நுழைந்து வங்கி ஊழியர்கள் மீதும், பாதுகாவலர் மீது மிளகாய் பொடியை தூவி, வேனில் இருந்த ரூ.70 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் ஜீப்பில் தப்பினர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, கொள்ளையர்களுக்கும், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் அமோல் போ‌ஷலேக்கும் தொடர்பு இருப்பதும், அவரது ஆலோசனைப்படியே இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியதும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நிலையில், நேற்று வங்கி மேலாளர் அமோல் போ‌ஷலேயை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கொள்ளையர்களின் இருப்பிடத்தை கண்டறிவதற்காக அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கிக்கு சொந்தமான ரூ.70 லட்சத்தை அதன் மேலாளரே கொள்ளையடித்த சம்பவம் வங்கி ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story