விமான நிலையத்தில் கழிவறையில் கிடந்த ரூ.34.17 லட்சம் தங்க கட்டிகள் மீட்பு
மங்களூரு விமான நிலையத்தில் கழிவறையில் கிடந்த ரூ.34.17 லட்சம் தங்க கட்டிகளை மீட்டு வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மங்களூரு,
மங்களூரு பஜ்பே சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் துபாயில் இருந்து தனியார் விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மங்களூரு விமான நிலையத்தில் சோதனை நடத்தினார்கள். மேலும் அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிர சோதனை செய்தனர். ஆனால், பயணிகளிடம் இருந்து தங்கம் எதுவும் கிடைக்கவில்லை.அந்த சமயத்தில் விமான நிலைய கழிவறையில் ஒரு பை கிடப்பதாக துப்புரவு பணியாளர் ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது.
அந்த தங்க கட்டிகள் 1 கிலோ 166 கிராம் இருந்ததும், அவற்றின் மதிப்பு ரூ.34.17 லட்சம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்க கட்டிகள் மீட்கப்பட்டன. அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்தது யார்? என்பது வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், இதுதொடர்பாக தீவிர விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.Related Tags :
Next Story